கமல், விக்ரம் போன்ற பிரபலங்கள் மற்றும் இன்ன பிற ஊடகங்கள் என எல்லாரும் பாராட்டு பத்திரம் வாசித்த படம் இது. அது போக படத்தை பார்த்து இம்ப்ரெஸ் ஆன உதயநிதி தன்னுடைய பேனரில் ரிலீஸ் செய்தது என எதிர்பார்ப்பை எகிற வைத்த படம் இந்த மைனா.... தீபாவளி அன்றே போக வேண்டும் என்று நினைத்து முடியாமல் நேற்று இரவுக் காட்சிக்கு நம்ம ஏவிஎம் அரங்கில் சென்று பார்த்தேன்.
சிறுபிள்ளைப் பருவத்தில் இருந்து நாயகனும் நாயகியும் ஒன்றாகவே சுத்தி திரிகிறார்கள். பருவத்தில் இருவருக்கும் வந்தே ஆகவேண்டிய காதல் வந்து தொலைக்கிறது. அது வரைக்கும் மருமகனேன்னு வாய் நெறைய கூப்பிடுற நாயகியின் அம்மா இவங்க கட்டி பிடிச்சு முத்தம் குடுக்கிறதைப் பார்த்த உடனே ருத்ர தாண்டவம் ஆடுறாங்க. அதிலே வர்ற தகராறில் நாயகன் சிறைக்கு செல்கிறார். அவர் சிறையில் இருக்கும் போதே, நாயகிக்கு கல்யாண ஏற்பாடுகளை அவங்க அம்மா செய்ய ஆரம்பிக்க, இது தெரிஞ்ச நாயகன் விடுதலைக்கு ரெண்டு நாட்களே மிச்சம் இருக்கையில் சிறையிலிருந்து தப்பித்து ஊருக்கு வருகிறார். இவரைப் பிடிக்க இரண்டு போலீஸ் அவர்களின் மலை கிராமத்துக்கு வருகிறார்கள். நாயகனை பிடித்துக் கொண்டு சிறைக்குத் திரும்பும் போது நாயகியும் வேறு வழியின்றி இவர்களுடன், நாயகனை சிறையில் அடித்தார்களா, கூட வந்த மைனாவின் கதி என்ன, தலை தீபாவளிக்கு கூட மாமியார் வீட்டுக்கு போக முடியாமல் நாயகனைத் தேடி வரும் போலீஸ் என்ன செய்தார்கள் என்பது மீதிக் கதை.
சுருளியாக வித்தார்த், தொட்டுப்பார் படத்தில் ஏற்கனவே அறிமுகமானவர். சுருளியாக ஊரில் சண்டித்தனம் செய்து கொண்டு, மைனாவிற்க்காகவே வாழும் ஒரு டிபிகல் தமிழ் சினிமா ஹீரோ. பரட்டைத்தலை, தாடி, ஊதாரித் தனம், அப்பனை மரியாதை இல்லாம பேசுறது இன்ன பிற இலக்கணங்களை தவறாமல் கடைப் பிடிக்கிறார்.நடிப்பென்று பார்த்தால் சில காட்சிகளில் ஓ.கே. ஆனால் அதற்காக பருத்தி வீரனை நகல் எடுத்திருப்பது ஹ்ம்ம்....என்னத்த சொல்ல!!!
மைனாவாக அமலா பால்! சிறு ஒப்பனை கூட இல்லாமல் கிராமத்து அழகியாக வலம் வருகிறார். பாதி வசனங்களை இவர் கண்களே பேசி விடுகின்றது. இவர் அழகாக தெரிவதற்கு அந்த பாத்திரப் படைப்பும் ஒரு காரணம். முதல் படத்தை ஒப்பிடும் போது நடிக்க நிறைய வாய்ப்பு, சரியாக பயன் படுத்தி உள்ளார். பார்க்கலாம், இனி வரும் படங்களை எப்படி என்று.
படம் மொத்தத்தையும் தோள் மீது சுமப்பவர் தம்பி ராமையாதான். எப்போதும் வடிவேலு உடன் ஒட்டிக்கொண்டு வருபவருக்கு இதில் தனி ஆவர்த்தனம். நக்கல், நையாண்டி, ஏமாற்றம், வெறுப்பு, நயவஞ்சகம் என எல்லா உணர்ச்சிகளையும் அனாசயமாக முகத்தில் கொண்டு வருகிறார்.இவர் செல் போனில் மனைவி செந்தாமரையிடம் பேசும் காட்சிகள் அழகோ அழகு.
படத்தில் வரும் அனைத்து நடிகர்/நடிகைகளும் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார்கள். இன்ஸ்பெக்டராக வரும் சேது, தலை தீபாவளிக்கு போக முடியாத வெறுப்பை உமிழும் போது ஏ-கிளாஸ்! பின்னொரு சமயத்தில் தன் உயிரை காப்பாற்றும் சுருளியை நன்றி ததும்ப ஒரு பார்வை பார்ப்பாரே! சூப்பர் சார்! அந்த முதல் காட்சியிலே இன்ஸ்பெக்டரின் மனைவி கேரக்டர் தெள்ளத் தெளிவாக நமக்கு புரிகிறது. வீட்டுக்கு வர கொஞ்சம் லேட்டாகும்னு சொல்பவரிடம் "வருவீங்களா மாட்டீங்களா"னு திரும்ப திரும்ப கோபத்தில் கேக்கும்போது அரங்கத்தில் கைத்தட்டல்! பல பேர் பாதிக்கபட்டிருக்காங்க!
நாயகியின் அம்மா, நாயகனின் அப்பாவாக நம்ம செவ்வாழை, சில ஒன் லைனர்களால் சிரிப்பு மூட்டும் அந்த சிறுவன், பள்ளி வாத்தியார், இன்ஸ்பெக்டர் மனைவியின் அண்ணன்மார்கள், அண்ணிகள், அந்த பஸ் பயணத்தில் உடன் பயணிப்பவர்கள், மூனாறு சுப்பிரமணி என அனைத்து பாத்திரங்களும் நம் மனதில் நிற்பது இயக்குனரின் வெற்றி.
இமானின் இசை இந்த படத்தில் ஒரு புது பரிணாமம்! பாடல்கள் எல்லாமே ரசிக்கும் படி இருந்தது.. குறிப்பாக மைனா, நீயும் நானும் பாட்டு... பின்னணி இசை எனக்கு அந்த அளவுக்கு திருப்தியாக இல்லை, ஒரு நாலு ட்ராக் மீண்டும் மீண்டும் ஒலித்தது போன்ற ஒரு உணர்வு...
சுகுமாரின் ஒளிப்பதிவிற்கு ஒரு போக்கே! தேனி, குரங்கனியின் அழகை அள்ளி பருகி இருக்கிறது அவரின் காமெரா. அந்த மலைப் பாதையில் நால்வருடன் நாமும் பயணிப்பது போல் உணருகிறோம்.
பிரபு சாலமனின் படங்கள் எல்லாமே நமக்கு ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்துபவை. ஆனால் படம் முடிந்து வரும் போது "இன்னும் கொஞ்சம் நல்லா எடுத்திருக்கலாமோ"னு ஒரு எண்ணம் நமக்கு வரும்,இந்த படம் அந்த எண்ணத்தை முற்றிலுமாய் நீக்க வில்லை என்றாலும், நிச்சயமாக அவரின் உழைப்பை பாராட்ட வேண்டும். இந்த படத்தை எந்த தளத்தில் கொண்டு செல்வது என்ற சிறு தயக்கம் இயக்குனரிடம் இருந்தது போல் தெரிகிறது. ஒரு முழு காதல் கதையா , திரில்லரா, அல்லது ஒரு அட்வென்சர் படமா என்றில்லாமல் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் தொட்டுச் சென்றுள்ளது படம்.
நான் ரசித்த காட்சிகள்:
அமலா வயசுக்கு வந்த உடன் "யார் இவளை தூக்கிட்டு போவானோ" என்னும் பெண்ணை தனியாக போயி மண்டையிலே கொட்டி "சுருளி மகாராஜந்தான் கட்டிக்குவான்"னு சொல்ல சொல்லுவாரே... செம!
காட்டுக்குள் தனியாக போகும் போது தம்பி ராமையா புலி போட்டோவை பார்த்து புலி என பயந்து நடுங்கும் காட்சி
தங்கச்சி பேச்சைக் கேட்டு அண்ணன்கள் தங்கள் மனைவி சேலை நல்லா இல்லை என சொல்லும் போது, கடைசி அண்ணி "பெரிய சின்னத்தம்பி குஷ்பூ" என அங்கலாய்க்கும் காட்சி.
அந்த பஸ் விபத்துக்கு முன்னும் பின்னும் வரும் நகைச்சுவைக் காட்சிகள்! சிரித்து சிரித்து வயிறு வலித்தது.
அந்த ஒரு முத்தக் காட்சி.... ஹீ ஹீ ஹீ!
என் மனதில் தோன்றிய சில கேள்விகள்:
கிராமத்து கதை எடுத்தால், பருத்தி வீரனின் பாதிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டுமா?
வயசுக்கு மீறி பேசும் சிறுவர்களை இன்னும் எத்தனை சினிமா பார்க்கும்?
அறியாப் பருவத்தில் வரும் காதலை வைத்து இன்னும் எத்தனை படங்கள் வரும்?
முடிவில் சோகம் வேண்டும் என்ற எண்ணத்தை எப்போது இயக்குனர்கள் மாற்றுவார்கள்?
தங்கள் கதையில் மட்டும் நம்பிக்கை வைத்து பார்முலாக் காட்சிகளை எப்போது கைவிடுவார்கள் நம் இயக்குனர்கள்?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக