ஆயிரத்தில் ஒருவனாக கோச்சடையான் !




சூப்பர்ஸ்டார் படம் என்றாலே பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்குமே கொண்டாட்டம் தான்.அதுவும் கொஞ்சம் புதிய பரிமானத்தில் , இந்தியாவிலே முதல் முறையாக“PERFORMANCE CAPTURE PHOTO REALISTIC” முறையில் எடுக்கப்பட்டால் அதைவிட நமக்கு சந்தோஷம் வேறு என்ன வேண்டும்.
சௌந்தர்யா R அஷ்வின் , ஏ.ஆர்.ரஹ்மான் , கே.எஸ்.ரவிகுமார், வைராமுத்து ஆகியியோர் கூட்டணியில் உருவாகும் கோச்சடையான் , “மக்கள் திலகம் ” எம்.ஜீ.ஆர் அவர்களின் ஆயிரத்தில் ஒருவன் படத்தை போன்று இருக்கும் என்று பேசப்படுகிறது.கதை எப்படி இருந்தாலும் ஆயிரத்தில் ஒருவனாக “கோச்சடையான்” நிச்சயம் இருப்பார் என்பது மட்டும் உறுதி .


முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே;
உலகம் உன்னை விழுங்கி விடும்.
-பாரசீகம்
Read more »

ஆல் இஸ் வெல் .. நண்பன்


நீண்ட நாளைக்குப் பிறகு ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு காலேஜ்மாம் என்ற ரீதியில் மிக நீளமான ஒரு தமிழ் படத்தை வழங்கியிருக்கிறார் சங்கர். ஆரம்பத்தில் ராகிங் நடப்பது அதிலும், பேண்டை அவிழ்த்து ஜட்டியுடன் சீனியர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது கொஞ்சம் முகம் சுளிக்க வைக்கிறது. அதே போன்று சீன்களே படம் முழுவதும் சில இடங்களில் வருகிறது.

விஜய் பாரிவள்ளல் என்ற மாணவனாக கல்லுரிக்குள் நுழைந்த நாள் முதலே அந்த கல்லுரியில் ஒவ்வொரு செயலுக்கும் இடக்கு மடக்கு பண்னுவதாகப் கல்லுரி முதல்வர் சத்யராஜ் நினைத்து பல இடைஞ்சல்களைத் தருகிறார். இவர் இரண்டு கைகளில் இரண்டு வேளைகளை ஒரே நேரத்தில் செய்பவர் மற்றும் தினம் 7 நிமிடம் மட்டும் சேவிங் செய்ய டைம் ஒதுக்குபவர்.
நினைத்த மாதிரியே ஜீவாவின் வறுமை குடும்பம், ஸ்ரீகாந்தின் நடுத்தரக்குடும்பம் மகனை ஒரு என்ஜினியராக்கியே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது… ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் முதலில் வருவதற்கு மாணவரிடையே நடைபெறும் போட்டி, சத்யன் மனப்பாடம் செய்து அனைத்துக்கும் முதலாக வருவது என நன்றாக செய்திருக்கிறார், பிறறைவிட அதிக மார்க்க எடுக்க வேண்டும் என்பதற்காக பரிட்சை அன்று முதல் நாள் இரவு அனைத்து ரூம் வழியாக ஒரு மாதிரிப் புத்தகங்களை தள்ளிவிட்டு கவனத்தை சிதைப்பது கவனத்தை கவர்கிறது. புராஜெக்ட் நீட்டிப்பு கிடைக்காததால் மண்டையைப் போடும் சக மாணவன். சத்யன் மூலமாக பிரின்ஸிபால் மற்றும் கல்வி அமைச்சரை கலாய்த்ததால் சத்யன் போடும் சபதம் போன்றவைகளும், பிரின்ஸிபாலின் இரண்டாவது பெண்னையே விஜய் டாவடிப்பது எனத் ஒன்றுஒன்று விட்டு காட்சிகள் தொடர்கிறது. பாரிவள்ளல் ஒரு மழைபுயல் நாளில் பிரின்ஸிபாலின் பெண்னுக்கு பிரசவம் பார்த்தல், வினாத்தாளை நண்பனுக்காக திருடி மாட்டிக் கொள்வது, சேவற்கொடி செந்தில் (ஜீவா) அப்பாவை பிழைக்க வைக்கிறது போன்றவை காட்சிகளில் ரசிக்கதக்கவை.
கல்லுரியை விட்டு பிரிந்தவுடன் விஜயின் தொடர்புஇல்லாமல் 10 ஆண்டுகள் இருப்பதும், சபதப்படி செப்டம்பர் 5 அன்று சத்யன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து நண்பர்கள் இருவரையும் கல்லுரியின் வாட்டர் டேங்க்க்கு வரவழைப்பது.. சுவாரசியம். மூவரும் சேர்ந்து விஜயைத் தேடுவதும், இடையில் பிரின்ஸியின் இரண்டாவது மகளுக்கு அமெரிக்கா மாப்பிள்ளையுடன் திருமணம் நடக்க இருப்பதை அறிந்து, பெண்ணையும் அள்ளிக்கொண்டு தனுஷ்கோடிக்கு பறப்பதும், இடையில் பாரிவள்ளல் என்பவர் விஜய் அல்ல என குட்டி பிளாஷ்பேக் வேறு… அப்பாடா… காரின் வேகத்திலேயே நமக்கும் விஜய் என்ன ஆனார் என அறிந்து கொள்ள ஆர்வம் தொற்றிக்கொள்கிறது.
கடைசியில் விஜய் ஆசைப்பட்டது மாதிரியே சும்மா மனப்பாடம் செய்து படிப்பதைத் விடுத்து அனைத்தையும் செய்முறை மற்றும் அறிவைப் பயன்படுத்தி உருவாக்கி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற தாரக மந்திரத்தை உருவாக்கி ஒரு பள்ளியின் ஆசிரியர் கம் உலகம் போற்றும் குறிப்பாக சத்யன் தேடும் நெ.1 சயின்டிஸ்ட் ஆகவும், சத்யராஜின் இரண்டாவது மகளை கைப்பிடிப்பதும் நண்பர்கள் அனைவரும் இணைவதும் 100 சதவீதம்… தமிழுக்கு புதிய வரவுதான். இடையில் மில்லிமீட்டர் என்ற கல்லுரி எடுபிடி.. சீனியர் மாணவர்களுக்கு படிப்பினை ஏற்படுத்துவது… பிரின்ஸிபாலிடம் (சத்யராஜ்) முடிந்தவரை சாப்ட்டாக எதிர்வாதம் செய்வது, ஆல் இஸ் வெல் என்று எப்பொழுதும் சொன்னால் அனைத்தும் நன்றாக நடக்கும் என்று அனைவரையும் சொல்லவைப்பது குறிப்பிடத்தக்கது.
நண்பன்… ஆல் இஸ் வெல்.
Nanban .. All is Well




தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி
எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது
இழிவானது
-ஹென்றி போர்டு
Read more »

தனுஷ், சிம்பு வரிசையில் அடுத்து விஜய் ரசிகர்களுக்காகவும் ஒரு பாடல்!


தனுஷ் WHY THIS KOLAVERI பாடல் மூலம் பிரபலமாகி விட்டார். சிம்பு A LOVE ANTHEM FOR WORLD PEACE என 96 மொழிகளில் காதல் என்ற வார்த்தைகளை கோர்த்து ஒரு பாடலாக தொகுத்து வெளியிட இருக்கிறார். இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், விஜய்க்காக ‘THALAPATHY ANTHEM’ என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள்.
‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் வரும் பஸ் காட்சிகளில் கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். டிவிட்டர் இணையத்தில் இது குறித்து விஜய் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், ஜனவரி 20ம் தேதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார். கிளம்பிட்டாங்கய்யா… கிளம்பிட்டாங்க…
-
-

தனுஷ்,  சிம்பு வரிசையில் அடுத்து விஜய் ரசிகர்களுக்காகவும் ஒரு பாடல்!

Read more »

கொலவெறி பாடல் சூட்டிங் ஆரம்பம் – ஆடியே ஹிட், வீடியோ?


சென்னையில் நடைபெற்று வரும் கொலவெறி டி பாடல் காட்சிகளுக்கான சூட்டிங்கில் நடிகர் தனுஷூம், நடிகை ஸ்ருதியும் ஆட்டம் போட்டு வருகிறார்கள். கொலவெறி பாடல் Audio செம ஹிட் ஆகியுள்ள நிலையில் அந்தப் பாடலுக்கான காட்சிகள், படம் குறித்த எதிர்பார்ப்புங்கள் அதிகரித்துள்ளன.
கொலவெறி பாடலுக்கான காட்சிகளை படமாக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில், இந்த பாடல் காட்சிகள் படமாகி வருகின்றன. இதில் படத்தின் நாயகன் தனுஷ் மற்றும் நாயகி ஸ்ருதிஹாசன் ஆடுகிறார்கள். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆரம்பித்த சூட்டிங், தொடர்ந்து நடந்து வருகிறது.
கொலவெறிடி பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியிருப்பதால் பாடலுக்கான காட்சிகளை மிகவும் கவனமாக, ரசிகர்களை மேலும் மேலும் ஈர்க்கும் வகையில் படமாக்கி வருவதாக கூறியிருக்கிறார் டைரக்டர் ஐஸ்வர்யா தனுஷ். எனினும், பாடல் ஹிட் ஆனதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களும் அதிகரித்துள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் வீணாகிவிடுமோ என்ற அச்சமும் ஒரு சிலரிடம் ஏற்பட்டிருக்கிறது.
Read more »

சண்டீவி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய டாம் குரூஸ்!!!


மிஷன் இம்பாசிபிள்-4 கோஸ்ட் புரோடோகால் படத்தின் முக்கிய கிளைமாக்ஸ் காட்சிகள் சன் டிவி அலுவலகத்தில் தான் படம் பிடிக்கப்பட்டுள்ளன.மும்பையில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகள் சென்னை சன் டிவி அலுவலகத்தில் தான் எடுக்கப்பட்டுள்ளன.
ஒரு ரஷ்ய அணு ஆயுத விஞ்ஞானி உலகில் அணு ஆயுதப் போரை தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபடுகிறார். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் தாக்குதல் நடத்தி, ரஷ்ய அணு ஏவுகணைகளை செலுத்த உதவும் codeகளை திருடுகிறார்.
இந்த codeகளைக் கொண்டு, ரஷ்ய அணு ஆயுத ஏவுகணையை அமெரிக்கா மீது செலுத்த மும்பை வருகிறார்.
இந்தியாவில் மாபெரும் தொலைத் தொடர்பு நிறுவனம் நடத்தி வரும் பிரிஜ் நாத்தின் (அனில் கபூர்) கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பழைய ரஷ்ய செயற்கைக் கோளின் உதவியோடு இந்த ஏவுகணையை செலுத்த வருகிறார் அந்த ரஷ்ய விஞ்ஞானி.
இதற்காக மும்பையில் ஒரு தொலைக்காட்சி அலுவலகத்தின் satellitte uplinking மையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தபடியே ரஷ்ய அணு ஏவுகணையை செலுத்துகிறார். ஏவப்பட்ட அணு ஏவுகணையை செயலிழக்கச் செய்ய ‘ஹீரோ’ டாம் க்ரூயிஸ் தனது டீமுடன் அங்கு வந்து மோதலில் ஈடுபடுவது தான் படத்தின் கிளைமாக்ஸ்.
இந்தக் காட்சிகளில் வரும் தொலைக்காட்சி அலுவலகம் சன் டிவி அலுவலகம் தான். அதன் satellitte uplinking அறைக்குள் வில்லன் நுழையும்போது அங்குள்ள தொலைக்காட்சி ஸ்கீரின்களில் சன் டிவி, சன் நியூஸ், கே.டிவி, சுட்டி டிவி என தமிழ் சேனல்கள் ஓடுகின்றன.
ஹாலிவுட்டின் இந்த ஆண்டின் மிக பிரமாண்டமான ஆக்ஷன் படத்தில் நம் ஊர் சேனல்களைப் பார்த்தவுடன், விசில் பறக்கிறது.
மும்பையில் நடப்பதாகக் காட்டப்படும் இந்தக் காட்சிகளின் சில பகுதிகள் பெங்களூரில் எடுக்கப்பட்டுள்ளன. ஒயிட்பீல்டில் உள்ள ஐடிபிஎல் கட்டிடத்தில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகளில் கன்னடமும், சன் டிவி அலுவலகத்தில எடுக்கப்பட்டுள்ள காட்சிகளில் தமிழ் எழுத்துக்களும் வருகின்றன.
படத்தின் டைரக்டருக்கு இந்தியாவில் மாநிலத்துக்கு மாநிலம் பேசப்படுவது வெவ்வேறு மொழி என்பதை சொல்லாமல் விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. இதனால் ஒரே இடத்தில் நடப்பதாக சொல்லப்படும் காட்சிகளில் 3 மாநிலங்களும் தமிழ், கன்னடம், இந்தி, மராத்தி எல்லாமே நான்கு மொழிகளும் எட்டிப் பார்க்கின்றன.
இது ஒரு பெரிய குறையா என்றால், நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன். காரணம், படத்தின் ஆக்ஷன் அப்படி.. துபாயின் உலகிலேயே மிக உயரமான ப்ருஜ் கலிபா கட்டடத்தின் வெளியே டூப் போடாமல் டாம் க்ரூயில் வெளியே தொங்கும் காட்சி ஒன்றுக்காகவே, இந்தப் படத்தின் எல்லா குறைகளையும் மறந்துவிடலாம்.
Read more »

ஏழாம் அறிவு டிரைலர் சொல்லும் கதை என்ன?

ஏழாம் அறிவு’ படத்தின் கதைதான் என்ன என்பதை அந்தப்படத்தின் டிரைலரை
அடிப்படையாக வைத்து கண்டுபிடித்து யார் எழுதுகிறார்கள் என்பதுதான் ஃபேஸ் புக்கில் இப்போதைய ஹாட்டான விளையாட்டு!  டிரைலரை வைத்து ஆன்லைன் ரசிகர்கள் எழுதிய கதைகளில் இந்தக் கதைக்கு மதிப்பெண்களை வாரி வழங்கியிருகிறார்கள். அந்தக் கதை இதுதான்!
ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு, காஞ்சிபுறத்தில் வாழ்ந்த போதி தர்மர், அரசியல் நெருக்கடிகளால் சீனாவுக்கு நடந்தே சென்று சேர்கிறார். அங்கே அவர் மருத்துவம் பார்க்கிறார். சீனர்களுக்கு களறியை கற்றுக் கொடுக்கிறார். புத்தமத்தின் புதிய பிரிவை தொற்றுவிக்கிறார். அவரது பரம்பரையில் வந்த சர்க்கஸ் கலைஞரான  சூர்யாவை தேடிக் கண்டு பிடித்து, அறுவை சிகிச்சை மூலம் அவரது டி.என்.ஏ.வை தூண்டி விடுகிறார்கள். இதனால் அவருக்கு போதி தர்மரின் திறமைகளான போர்திறம், வீரம், தற்காப்பு பயிற்சி போன்றவை அவருக்கு நினைவிற்கு வருகின்றன.

சீன உளவுத்துறையால் ஆபரேஷன் ரெட் மூலம் இந்தியாவில் நோய்க் கிருமிகளை பரவச்செய்ய அனுப்பபடும் வில்லன் ஜானி, நோக்கு வர்மம் என்ற ஹிப்னாடிஸம் மூலம் தன் வழியில் குறுக்கிடும் ஆட்களை வசியப்படுத்தி கொண்டு ஆதாரம் இல்லாமல் செய்கிறான். அதை முறியடிக்க சூர்யாவிற்கு உதவுகிறார் இளம் விஞ்ஞானி ஸ்ருதி ஹாசன்.

வில்லன் தனது சதியை நிறைவேற்றி இந்தியாவில் இருந்து அவன் வெளியேரும் முன், அவனை அழித்து இந்தியாவைக் காப்பாற்றுகிறார். என்பது தான்.
Read more »

காவலனை பார்த்து கண்கலங்கிய சீன ரசிகர்கள்: விஜய் நெகிழ்ச்சி!

ஷாங்காய் நகரில் நடந்த திரைப்பட விழாவில் விஜய்யின், "காவலன்" படத்தை பார்த்த ரசிகர்கள் கடைசி 20 நிமிடங்களில் கண்கலங்கி போனார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் விஜய். சீனாவின் ஷாங்காய் நகரில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதில் விஜய் நடித்த காவலன் படமும் திரையிடப்பட்டது. விழாவில் காவலன் படம் ஆங்கில மற்றும் சீன மொழி சப்-டைட்டிலுடன் இந்த படம் திரையிடப்பட்டது. இந்தவிழாவில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டார். சர்வதேச திரைப்பட விழாக்களில் விஜய் பங்கேற்பது இதுதான் முதன்முறை.

விழாவில் பங்கேற்ற விஜய் பேசியதாவது, ஷாங்காய் பட விழாவில் "காவலன்" படம் பங்கேற்றது, அந்தவிழாவில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தந்தது. நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இங்குள்ள சீனர்கள் ரசித்தனர். குறிப்பாக காமெடி காட்சிகளை பார்த்து விழுந்து, விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கி போனார்கள். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடித்ததும் என் கேரக்டரான பூமி பெயரைச் சொல்லி அனைவரும் பாராட்டியது எனக்கும் மிகழ்ச்சியாகவும், அதேசமயம் பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இந்த விழா அமைந்தது.


உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். நான் படிக்கும்போது அவருடைய படங்களை நிறைய பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் படம் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்வில் மறக்க மாட்டேன். இவ்வாறு விஜய் பேசினார்.


விஜய்யின் பேச்சுக்கு அனைவரையும் கவரே, எல்‌லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவு பரிசு ஒன்றை விஜய் வழங்கினார். இவ்விழாவில் காவலன் படம் பங்கேற்ற உறுதுணையாக இருந்த ரேக்ஸ் அவர்களுக்கு விஜய் தமது நன்றியை தெரிவித்து கொண்டார்.

Read more »

ரஜினிக்கு அர்ப்பணிக்கிறேன். தேசிய விருது பெற்ற தனுஷ் பேட்டி.

தேசிய விருது பெற்றது குறித்து நடிகர் தனுஷ் பெருமிதத்துடன் கூறியதாவது: ‘ஆடுகளம்‘ படத்தை, தேசிய விருதுக்கு அனுப்பினது தெரிந்து மகிழ்ச்சி  அடைந்தேன். விருது கிடைத்தது அறிந்து  சந்தோஷத்துக்கு அளவே இல்லை. தேசிய விருது ஜூரிகளுக்கு நன்றி. ஏனென்றால் வட இந்தியாவில் தனுஷ் என்பவனை யாருக்குமே தெரியாது. அதற்கு பிறகு அம்மா, அப்பாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். எனக்கு சேர்கிற எல்லாத்துக்கும் அவங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.

எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த அண்ணன் செல்வராகவனுக்கும் இந்த விருதில் பங்கு இருக்கிறது. முதல் நாளில் இருந்தே விருது கிடைக்கும் என்று சொல்லி வந்த என் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் நன்றி. படத்தை பெரிய அளவுல மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சாருக்கு கட்டாயம் நன்றி சொல்லணும். இந்த விருதை ரஜினி சாருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்.

சிறந்த படம்    :    ஆதாமின்டே மகன் அபு (மலையாளம்)
சிறந்த நடிகர்    :    தனுஷ் (ஆடுகளம்), சலீம் குமார் (ஆதாமின்டே மகன் அபு)
சிறந்த இயக்குனர்    :    வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த திரைக்கதை    :    வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த நடன அமைப்பு    :    தினேஷ் (ஒத்த சொல்லால... ஆடுகளம்).
சிறந்த எடிட்டிங்    :    கிஷோர் (ஆடுகளம்)
சிறந்த பொழுதுபோக்கு படம்    :    தபங் (இந்தி)
சமூக பிரச்னை பற்றிய படம்    :    சாம்பியன்ஸ்(மராட்டி).
ஒளிப்பதிவு    :    மது அம்பாட் (ஆதாமின்டே மகன் அபு).
சிறந்த நடிகை    :    சரண்யா பொன்வண்ணன் (தென்மேற்கு பருவக்காற்று), மித்தாலி (பபு பஞ்ச் பாச்சா, மராட்டி).
சிறந்த குணசித்திர நடிகர்    :    தம்பி ராமய்யா (மைனா).
சிறந்த பாடலாசிரியர்    :    வைரமுத்து (கள்ளிக்காட்டில் பொறந்த தாயே, தென்மேற்கு பருவக்காற்று).
துணை நடிகை    :    சுகுமாரி (நம்ம கிராமம்).
தயாரிப்பு வடிவமைப்பு    :    சாபுசிரில் (எந்திரன்)
ஸ்பெஷல் எபெக்ட்ஸ்    :    ஸ்ரீனிவாஸ் மோகன் (எந்திரன்).
சிறந்த குழந்தைகள் படம்    :    ஹெச்சேகாலு (கன்னடம்).
இசைஅமைப்பாளர்    :    விஷால் பரத்வாஜ் (இஷ்க்யா), ஐசக் தாமஸ் (ஆதாமின்டே மகன் அபு).
ஜூரி  விருது         :    வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்).

கலாநிதி மாறனுக்கு விவேக் பாராட்டு

நடிகர் விவேக் கூறியதாவது: சன் பிக்சர்ஸின் ‘எந்திரன்‘, ‘ஆடுகளம்‘ படங்களுக்கு இத்தனை விருதுகள் கிடைத்திருப்பது பெருமையான விஷயம். ‘ஆடுகளம்‘ 6 விருது பெற்றிருப்பது பெருமையான விஷயம். இதில் நடித்த தனுஷ், அப்படியே மதுரை இளைஞனாக மாறியிருந்தார். மதுரை மண்ணின் வாழ்க்கையை எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் வெற்றிமாறன் இயக்கினார். அதற்கான பரிசுதான் இந்த தேசிய விருது. ஆடுகளம் ஆர்ட் பிலிம் போல தோன்றும் கமர்ஷியல் படம். இந்த கதையை படமாக்குவது பெரிய ரிஸ்க். நிறைய துணிச்சல் வேண்டும்.

ஆடுகளம் அப்படி என்றால் ‘எந்திரன்’ அப்படியே தலைகீழ். அந்த பிரமாண்டம் இந்தியாவே இதுவரை பார்க்காதது. இத்தனை கோடிகளை கொட்டி படமெடுக்க மகா துணிச்சல் வேண்டும். இப்படி முற்றிலும் வெவ்வேறான கதைக்களத்தை சேர்ந்த இரண்டு படங்களையும் கொடுத்து தமிழுக்கு 8 தேசிய விருதுகள் கிடைக்க காரணமான கலாநிதி மாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எந்திரனுக்காக ரொம்பவும் உழைத்த ரஜினிக்கும்  ஒரு விருது கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

என் அம்மா கனவு நனவாகி இருக்கிறது

வெற்றிமாறன் கூறியது: இந்த விருதை எதிர்பார்க்கவில்லை. என் அம்மா மேகலா எப்போதும் நான் டெல்லியில் விருது வாங்க வேண்டும் என்று சொல்பவர். அவர் கனவு நனவாகியிருக்கிறது. ஷூட்டிங் முழுக்க மதுரையில் நடந்தது. மனைவிக்கு குழந்தை பிறந்தபோதுகூட சென்று பார்க்க முடியவில்லை. அந்த வேதனைகளை தாங்கிகிட்ட மனைவிக்கு நன்றி. இது வழக்கமான படம் இல்லை. ஆனாலும் என் மேல நம்பிக்கை வச்சு, முழு ஆதரவு கொடுத்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். படத்தை மாஸ் கிட்ட கொண்டு சேர்த்தது அவர்தான்.

ஒளியேற்றியது மைனா

தம்பி ராமய்யா கூறியது: ‘சினிமாவில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த எனக்கு ‘மைனா‘ ஒளியேற்றி வைத்தது. இயக்குனர் பிரபு சாலமனுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். மேலும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை இந்த விருது தந்திருக்கிறது. வயது முதிர்ந்த எனது தாய்க்கும், ஒரு வெற்றி பெற மாட்டாரா என ஏங்கிய என் மனைவிக்கும் இந்த விருது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அவர்கள் சந்தோஷம்தான் எனது சந்தோஷமும்’

எதிர்பாராத விருது இது

சரண்யா கூறுகிறார்: ‘தென்மேற்கு பருவக்காற்று‘ படத்தை பார்த்துவிட்டு எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று முதலில் சொன்னது மீடியாதான். அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது எதிர்பார்க்காத விருது. என்னை நம்பி இப்படியொரு கேரக்டரை கொடுத்த இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி.

மக்களின் வாழ்க்கையை அப்படியே எடுத்ததற்கு கிடைத்த வெற்றி

இயக்குனர் சீனு ராமசாமி கூறியது: ‘தென்மேற்கு பருவக்காற்று‘ ஒரு நிலத்தின் கதை. சரியான நில பின்னணியோடு அந்த மக்களின் வாழ்க்கையை எந்தவித சமரசமும் இல்லாமல் நேர்மையாக பதிவு செய்ததற்காக கிடைத்த பரிசாக இதை கருதுகிறேன். என்னை சிறு இயக்குனர் என்று நினைக்காமல் தாய் கேரக்டரை உள்வாங்கி நடித்த சரண்யா, படத்தை முதலில் பார்த்து கண்ணீர்விட்டு பாடல் எழுதிய வைரமுத்து, துணிச்சலோடு தயாரித்த சிபு ஜசக் ஆகியோர்தான் இந்த விருதுக்கு காரணம்.

6-வது முறையாக விருது பெறும் வைரமுத்து

தேசிய விருதை 6-முறையாக, கவிஞர் வைரமுத்து வாங்குகிறார். முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்காக தேசிய விருது பெற்றிருந்தார். அவர் கூறியது: பொதுவாக நான் பாட்டு எழுதிய பிறகுதான் படம் எடுப்பார்கள். ஆனால், ‘தென்மேற்கு பருவக்காற்று‘ படத்தில் தற்போது தேசிய விருது கிடைத்திருக்கும் ‘கள்ளிக்காட்டில் பொறந்த தாயே‘ பாடல் படம் எடுத்த பிறகு எழுதிய பாடல். இதுவரை நடுத்தர மற்றும் மேட்டுக்குடி தாய்களை பற்றிய பாடல்களே திரைப்படத்தில் வந்திருக்கிறது. முதன் முறையாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த, புழுதி மண்ணை சேர்ந்த ஒரு தாயின் பாடலாக இது எழுதப்பட்டது. தான் படிக்காமல் உழைத்து தன் பிள்ளைகளை படிக்க வைத்த, படிக்க வைத்துக் கொண்டிருக்கிற தாய்மார்களுக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன்
Read more »

பொலிஸாகவும் தாதாவாகவும் வரும் அஜித்

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் படம் மங்காத்தா.
இது அஜித் நடிக்கும் ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர்களுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், லட்சுமி ராய், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

சென்னை, மும்பை, ஹைதராபாத் என பறந்து பறந்து இப்படத்தின் சூட்டிங்கை முடித்து வருகிறார்கள். சூதாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அஜித் நடிக்கும் வேடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
நெருங்கிய திரைப்பட வட்டாரங்களில் விசாரித்த வரை, அஜித் பொலிஸ் அதிகாரியாகவும், தாதாவாகவும் மாறி மாறி வருகிறார் என்றனர். த்ரிஷா இப்படத்தில் முதல் முறையாக சென்னை வாழ் சேரிப்பெண்ணாக நடிக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால், சென்னைத் தமிழை தனது சொந்தக் குரலில் பேசி நடித்துள்ளார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் வழக்கம் போல் பொலிஸ் அதிகாரியாக அஜித்தை பிடிக்க வருகிறார். இவருக்கு ஜோடியாக லட்சுமிராய் நடிக்கிறாராம். கொமெடிக்கு பிரேம்ஜி அமரன் நடித்திருக்கிறாராம். மங்காத்தா படத்தில் ஒரு பாடல் நேற்று தான் வெளியாகியுள்ளது.
Read more »

கார்த்தி நடிக்கும் சகுனி திரைப்படம்

தமிழ் தாய் வாழ்த்தெல்லாம் பாடதீங்கப்பா. 'நீரா'ரும் கடலுடுத்த.... என்று பாடினால் Karthiஅதுலயும் நீரா(ராடியா) வருகிறதே என்றெல்லாம் கவலைப்படுகிற நிலைமைக்கு ஆளானார்கள் சில அரசியல் புள்ளிகள். அந்தளவுக்கு நீராராடியா என்ற அரசியல் தரகரின் புகழ் நாடெங்கிலும் ஒலித்தது. குறிப்பாக தமிழ்நாட்டில்...
ஆனால் அவரது கதையையே சினிமாவாக எடுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். அதிலும் முன்னணி நடிகரான கார்த்தி நடிக்கிறார் என்பது எவ்வளவு சுவாரஸ்யம்! இவர் நடிக்கும் சகுனி படத்தின் கதை அப்படியே நீராராடியாவின் கதைதானாம். ஆனால் இந்த கதையை பொறுத்தவரை கார்த்தி ஒரு ஆண் நீராராடியா!
ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுக்கு இடையே 'மூட்டிவிட்டே' வளரும் ஹீரோ ஒரு கட்டத்தில் அரசியல் சதுரங்கத்தில் மிக முக்கியமான ஆளாக உயர்வது போல அமைக்கப்பட்டிருக்கிறது திரைக்கதை. இதில் காட்சிக்கு காட்சி நீராராடியாவின் ரிசம்ளன்ஸ் அதிகம் என்கிறார்கள் இந்த படத்தின் வளர்ச்சியை அருகிலிருந்து கவனிக்கும் சில முக்கியஸ்தர்கள்.
பொதுவாகவே அரசியல் தொடர்பான கதையில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் அஞ்சுவார்கள். ஆனால் கதை கேட்டபின் உற்சாக துள்ளலோடு நடிக்க ஒப்புக் கொண்டாராம் கார்த்தி.
ஆட்சி மாறாம இருந்திருந்தா தெரிஞ்சுருக்கும் சேதி...!
Read more »

Angels & Demons


இந்தப் படத்தில் வரும் காட்சிகளும்,கதாபாத்திரங்களும் கற்பனையே. . எதையும்,யாரையும் குறிப்பிடுபவையல்ல. . .’ என்றுAngels & Demons படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் தியேட்டரில் ஸ்லைடு போடுகின்றனர்.
இப்படி எத்தனையோ படங்களில் சொல்லியிருந்தாலும், Angles & Demons-ஐ நாம் அப்படி நம்பிவிடமுடியாது. இது யாரையோ குறிக்கிறது, அல்லது யாரையோ குறிவைத்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.இதற்கு ஒரு காரணம், வலுவான பின்னணியும் உண்டு.2006இல் ஸோனி பிக்சர்ஸ் மூலம் வெளியிடப்பட்ட ‘The Davinci Code’, $750மில்லியன் வசூல் செய்து உலக சாதனையை மட்டும் நிகழ்த்தவில்லை.உலக கிறிஸ்துவர்கள், குறிப்பாக கத்தோலிக்க பிரிவினரின் எதிர்ப்பையும் சந்தித்தது. பெரும் தடைகளுக்குப் பிறகு வெளிவந்த அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. ஒரு Action, thrill, suspense படம் எப்படி இருக்கவேண்டும் என்று இயக்குநர் Ron Howard அதில் நிரூபித்துள்ளார்.
அதற்குக் கொஞ்சமும் குறைவின்றி, அதே வேகத்துடன், விவாதத்திற்குரிய விஷயங்களுடன் வந்திருக்கும் Ron Haward-இன் புதிய படம்தான் Angels & Demons.Angels என்றால் தேவதைகள் என்பது தெரியும். Demons என்பது என்னவென்று எனக்குத் தெரியாததால், டிக்ஷனரியைப் புரட்டினேன். இதன் உச்சரிப்பு,டெமன் அல்ல. டீமன். அர்த்தம்: Supernatural being of eveil qwalities தீய ஆவி. . .
ஆக, நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையே நடக்கும் இடையறாத யுத்தம்தான் கதை. யார் நல்ல சக்தி என்பதை எவர் தீர்மானிப்பது என்பதில்தான், விஞ்ஞானிகளுக்கும், ஆன்மிக பீடங்களுக்கும் பனிப்போர் நடந்து வருகிறது.‘The Davinci Code’, ‘Angels & Demons’இரண்டும் பல லட்சம் பிரதிகள் பரபரப்பாக விற்பனையான நாவல்கள்.இவற்றை எழுதியவர் Dan Brown. இந்த நாவலின் நாயகன்,வழக்கமான மசாலா படங்களில் வரும் போலீஸ்காரனோ அல்லது ரகசிய ஏஜெண்டோ கிடையாது.ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் Robert Langdon தான் ஹீரோ. இந்தப் பாத்திரத்தில் ஹாலிவுட்டின் பிரபல ஹீரோ Tom Hanks நடித்துள்ளார்.
The Davinci Code -இலும் இவர் இதே பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் கையில் ஆயுதம் கிடையாது. சண்டை போடமாட்டார். இவர் ஒருSymboligist. அதாவது குறி, குறியீடுகளைப் படிப்பவர். அதன் மூலம் பரபரப்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு எளிய தீர்வைத் தருபவர்.கடந்த படத்தில் கதாநாயகி அழகாக இல்லை என்கிற குறை என்னைப்போன்ற கலா ரசிகர்களுக்கு இருந்ததை உணர்ந்த இயக்குநர்,இந்தப் புதிய படத்தில் அந்தக் குறையை நீக்கிவிட்டார்.இஸ்ரேலிய நடிகை Ayelet Zureer என்கிற பேரழகிதான் நாயகி. இவர் நின்றால் நிலா. நடந்தால் நந்தவனம். இவரது ஓரவிழிப் பார்வைக்காக, எவ்வளவு தூர வழியையும் கடக்கலாம். ஆறடி ஆரஞ்சு, உடம்பெல்லாம் ரோஜா பஞ்சு.சினிமாக்களில் Sequelவருவதுண்டு. அதாவது தொடர்ச்சி, இரண்டாவது பாகம்.உலகம் சுற்றும் வாலிபனுடைய sequelகிழக்காப்பிரிக்காவில் ராஜு,ஊமை விழிகளின் sequelமூங்கில்கோட்டை. இரண்டும் அறிவிக்கப்பட்டும் இன்னும் எடுக்கப்படவில்லை.இந்த இரண்டு படங்களையும் எடுக்கும் முயற்சியில் விஜயகாந்த் இறங்கினால்,இவை அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் என்பது என் நம்பிக்கை. . .ஒரு படத்திற்கு முந்தியது,இந்தக் கதைக்குமுன் என்ன என்பது Prequel.அப்படித்தான் The Davinci Code-இன் prequel-ஆக Angels & Demons வெளிவந்து,பெரிய வசூல் சாதனையையும், பெரும் வரவேற்பையும் பெற்றுவரும் அதே சமயம், சர்ச்சுகளாலும், கத்தோலிக்கர்களாலும், உலக கிறிஸ்துவர்களின் தலைவர் போப் இருக்கும் வாடிகன் நகரத்திலிருந்தும் எதிர்ப்பும் பெரிய அளவில் கிளம்பி இருக்கிறது.இந்த அளவிற்கு எதிர்ப்பைச் சந்திக்கும் இப்படத்தின் கதைதான் என்ன?போப் இறந்துபோன சூழலில் கதை துவங்குகிறது. அதனால் அவரால் தத்தெடுக்கப்பட்ட பாதிரியார் Ewan the gregon மிகுந்த துயரத்தில் இருக்கிறார்.அடுத்த போப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நான்கு கார்டினல்கள்-அல்லது இவர்களில் ஒருவர்தான் அடுத்த போப்பாக வரவேண்டியவர். அந்த நால்வரும் கடத்தப்படுகின்றனர்.அது மட்டுமின்றி, கார்டினல்களைக் கடத்தியவன் இவர்களை அன்றிரவே எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று மணிக்கு ஒவ்வொருவராய்க் கொல்வதாக எச்சரிக்கையும் விடுகிறான்.அவன் விட்டுச்சென்ற காகிதத்தில் Illuminati என்கிற symbol உள்ளது. இது17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள், நாஸ்திகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இதில் ஆரம்பத்தில் கலிலீயோ போன்ற விஞ்ஞானிகளும் உறுப்பினராக இருந்ததுண்டாம். விஞ்ஞானத்தை எப்பொழுதுமே மதம் மறுத்து வந்துள்ளது. விஞ்ஞானம் வளர வளர,மக்களின் மூட நம்பிக்கைகள் குறையும்போது, மதத்தின் வியாபாரம் படுத்துவிடும். விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளையும் மிகவும் இழிவுபடுத்தி கிறிஸ்துவத்தின் தலைநகரான வாடிகன் நகரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பல சதிகளைச் செய்து விஞ்ஞானிகளைக் கொன்றுள்ளதாக இந்தக் கதை கூறுகிறது.அந்த விஞ்ஞானிகளுடைய வழித்தோன்றல்கள்,நாஸ்திகர்களால் இன்றும் நடத்தப்படும் ஒரு ரகசிய சபைதான் Illuminati. . .பழிவாங்கத் தக்க தருணத்திற்காகக் காத்திருந்த அவர்கள், புதிய போப் தேர்ந்தெடுக்கப்படும் வேளையில் நான்குகார்டினல்களைக் கடத்திவிடுகின்றனர்.Symboligist-ஆன Tom Hanks, புனித நகருக்கு வந்து குறியீடுகளைப் படித்து, ஒவ்வொரு இடமாக வேகமாகச் சென்றும், சொன்ன நேரத்தில் முதல் மூன்று கார்டினல்கள் கொல்லப்படுகின்றனர்.நிலம் காற்று நெருப்பு என்று மூன்று விதத்தில் மூவர் கொல்லப்பட,இறுதியில் தண்ணீரில் கொல்லப்பட இருந்த Cardinal-ஐ மட்டுமே Tom Hanks-ஆல் காப்பாற்ற முடிகிறது.இந்தக் கதையின் ஊடே பரபரப்பான இன்னொரு முடிச்சும் போடப்படுகிறது. கதாநாயகி Ayelet Zureet ஒரு விஞ்ஞானி. ஜெனிவாவின் ஸெர்ன்லேப்பில் பணிபுரிபவர். அங்கிருந்து ஒரு ஆபத்தான ரசாயனம் திருடு போகிறது. இதைப்பற்றி நாயகி போலீசில் சொல்லவரும்போதுதான்,நாயகன் Tom Hanks-உடன் நட்பு ஏற்படுகிறது.அந்த ரசாயனமும் தீய சக்திகளின் கைகளில்தான் இருக்கிறது. நான்கு கார்டினல்கள் கொல்லப்பட்டபிறகு, சரியாக இரவு 12 மணிக்கு புனித தேவாலயம் உட்பட வாடிகன் நகரையே அழிப்பதுதான் அவர்களின் நோக்கம்.இந்தப் பேரழிவிலிருந்து அந்த நகரையும், புதிய போப்பின் தேர்வுக்காகவும்,பழைய போப்பின் மறைவுக்காகவும் வந்துள்ள லட்சக்கணக்கான மக்களையும் காப்பாற்றுவதும் பெரிய சவாலாக உள்ளது.புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டாரா, ஆபத்தான ரசாயனத்திலிருந்து, அதன் அழிவிலிருந்து புனித நகரம் மீண்டதா என்பதை பரபரப்பான கிளைமேக்ஸில் மெய்சிலிர்க்கும் விதத்தில் இயக்குநர் Ron Hawardதனக்கேயுரிய ஸ்டைலில் அசத்தும் விதத்தில் சொல்கிறார். ஏறக்குறைய 2மணிநேரம் 19 நிமிடங்கள் ஓடும் இப்படம், கொஞ்சம் கூட சலிப்பைத் தரவில்லை. அதற்கு நாவல் எழுதிய Dan Brawnன் விறுவிறுப்பான கதை மட்டுமே காரணமல்ல, David Koepp மற்றும் Akiva golsman ஆகியோருடன் சேர்ந்து எழுதிய திரைக்கதையும் முக்கிய உதவியாக உள்ளது.இந்தப் படம் ஓடும் நேரம்,ஏறக்குறைய ஒரு தமிழ்ப்படம் ஓடும் நேரம்தான். ஆனால்,இவ்வளவு வேகமாக நம் ஆளுங்க ஏன் திரைக்கதையை எழுதுவதில்லை. நம் ஆளுங்களுக்கு வேகம் என்றால் சேஸிங் ஸீன்தான். . .இந்தப் படம் வேகம், விறுவிறுப்பு இவைகளில் ஒரு புதிய மைல்கல் என்றே சொல்லவேண்டும். இதேமாதிரிதான் The davinci Code-உம் இருந்தது.இதுபோன்ற படங்கள் இங்கே எப்ப எடுப்பார்கள்?ஒருவேளை கமல்ஹாசன் Angels & Demons நாவலைப் படித்துத்தான்‘தசாவதாரம்’ படத்தின் கதை எழுதியிருக்க வேண்டும். அதன் சாயல் அதில் நன்றாகத் தெரிகிறது. ஆனால், உலக நாயகனாலே ஒரு சிறந்த திரைக்கதையை எழுத முடியாதது உலக வேதனை.பிளேக், டிபி, கேன்ஸர், எய்ட்ஸ் என்று ஆளைக் கொல்லும் நோய்கள் ஒரு பக்கம். சூறாவளி, பூகம்பம், புயல் மழை, சுனாமி என்று இயற்கைப் பேரழிவுகள் ஒரு பக்கம். இவைகளால் இதுவரை உலகில் கொல்லப்பட்டவர்களைவிட, மதங்களின் பெயரால், சொர்க்கத்தின் நம்பிக்கையால், கடவுள்களை குஷிப்படுத்த மனிதர்கள் மிக அதிகமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.இத்தனை கடவுள்கள் இருந்தும் ஏன் உலகில் இன்றும் ஏழ்மை ஒழியவில்லை? ஏன் இன்னும் போர் ஓயவில்லை?இன்றும் ஏதோ ஒரு மூலையில் பசிக்காக பால்சுரக்காத முலைகளில் முட்டி மோதும் பிஞ்சின் ஓலம் நம் காதல் விழுந்து கொண்டிருக்கிறது.கடவுள் Angels & Demons-ஐ அனுப்புவது இருக்கட்டும். முதலில் ரொட்டி அனுப்பட்டும் என்றுதான் அந்த ஓலம் சொல்கிறது.இந்த ஓரவஞ்சனை சமுதாயத்தில் நிலவும்வரை, பணக்காரர்களுக்குப் பாதுகாப்பாக மதபீடங்கள் விளங்கும்வரை illuminatiகளுக்கு அழிவில்லை என்றுதான் நினைக்கிறேன்.அழகை ஆராதிக்காத, அன்பைத் தாலாட்டாத, இசையைச் சீராட்டாத. .மழலையை ரசிக்காத. . . மதம். . அது இருந்தாலென்ன, இல்லாவிட்டால் என்ன. . .Angels & Demons குறிப்பிட்ட எந்த ஒரு மதத்தையும், அதன் ஆதிக்கத்தையும் குறித்து கேள்வி எழுப்புவதாக நான் நினைக்கவில்லை. Dan Brawn நாவல்,மற்றும் எழுத்து ஒட்டுமொத்த மூட நம்பிக்கைகளை எதிர்த்து ஒரு போர்ப்பிரகடனமாகும்.
Read more »

யுத்தம் செய் - சினிமா விமர்சனம்

மிஷ்கினின் மற்றுமொரு சிறந்த படைப்பு. மனதைக் கொள்ளை கொள்ளும் இயக்கம் என்றால் என்னவென்பதை உதவி, துணை, இணை இயக்குநர்களுக்காக மிஷ்கின் எடுத்திருக்கும் 4-வது திரைப்பாடம்.


உலகத்தின் புராதனத் தொழிலான பாலியல் துறையின் நவீனமயமாக்கலில் Bizarre என்றழைக்கப்படும் காம சேடிஸத்தையும், அதனை ரசித்து அனுபவிக்கும் மேட்டுக்குடி மக்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுயிருக்கிறது இந்தப் படம். நிச்சயமாக தமிழ்ச் சூழலுக்கு இதன் கதை புதிதுதான்.

தினவெடுத்த பணம் கொழுத்த முதலாளிகள் தங்களது ஆற்றாமையை போக்கிக் கொள்ள அப்பாவி இளம்பெண்களைப் பயன்படுத்திக் கொள்ளும் சூழலில் சிக்கிக் கொண்டு ஒரு அபலைப் பெண் உயிரைவிடுகிறாள். அவளது உயிருக்காக அதுவரை சமையலறையில் மட்டுமே கத்தியைப் பிடித்திருந்த அந்தப் பெண்ணின் தாயும், தந்தையும், தம்பியும் போஸ்ட்மார்ட்டம் ஸ்பெஷலிஸ்ட்டுகளை போல பதிலுக்குப் பதில் கொடுப்பதுதான் கதை.

முதல் காட்சியில் இருந்து இறுதிவரையில் மிஷ்கினின் சாம்ராஜ்யம்தான். அதே Wide Angle Shots. Long Shots.. கிடைத்த இடங்களில் மட்டுமே பின்னணி இசை.. அந்த இசையிலும் ஓட வைப்பவை.. மனதை லயிக்க வைப்பவை.. அழுக வைப்பவை என்று வெரைட்டியாக வயலினும், பியானோவும் கலந்து கட்டி அடித்து கதைக்குள் நம்மை தள்ளி விடுகின்றன.

சேரன் இதுவரையில் நடித்த படங்களிலேயே சிறந்த படம் இது. அவர் தனது படங்களை விட்டுக் கொடுக்க முடியாமல் இல்லை என்று கூறினாலும் இதுதான் உண்மை. அவர் தானே நடித்து தன்னை இயக்கிய திரைப்படங்களில் காட்டியது தமிழ்ச் சினிமாவின் ரசிகனை சமாதானப்படுத்த அவர் செய்து கொண்ட சமரசமான ஒரு நடுத்தர வர்க்க அடையாளம்தான் தெரிந்திருந்தது. ஆனால் இதில் வெறும் சேரன் மட்டுமே..



ஹீரோ இருக்கிறார். ஹீரோயின் இல்லை. காமெடியன் இல்லை.. ஆனால் வில்லன்களுக்கு பஞ்சமில்லை. இதில் யார் நிஜ வில்லன்..? யார் நிஜமில்லாத வில்லன் என்பதை படத்தின் முக்கால் பாகம் வரையிலும் சஸ்பென்ஸாகவே கொண்டு போயிருப்பதுதான் படத்தின் பலமே..

ஊரின் பல இடங்களில் வைக்கப்படும் அட்டைப் பெட்டியில் கிடக்கும் கைகளைப் பார்த்து விசாரணையைத் துவக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரான சேரனுக்கு ஏற்கெனவே இருக்கும் ஒரு பிரச்சனையைத் தெளிவாக்கிவிட்டுத்தான் காட்சியையே துவக்கியிருக்கிறார் இயக்குநர். இதனால் இயக்குநருக்குக் கிடைத்த பலம் சேரனின் இறுக்கமான முகம். உடல்வாகு போலீஸ்போல் இல்லாவிட்டாலும் நடை, உடை, பாவனை மூலம் சேரனை போலீஸ்காரனாகக் காட்டிவிட்டார் மிஷ்கின்.



காட்சியமைப்புகளை இப்படித்தான் மிஷ்கின் வைத்திருப்பார் என்ற ஊகத்தில் அவரது பெரும் ரசிகர்களான என்னைப் போன்றவர்கள் பலர் இருந்தாலும், எதுவுமில்லாமல் திரையரங்கிற்கு வந்தவர்களும் பிரமித்துத்தான் போனார்கள்.

போஸ்ட்மார்ட்டம் அறையை இவ்வளவு துல்லியமாக அலசியது இந்தத் தமிழ்ப் படமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஜெயப்பிரகாஷின் அந்த வேடம், இறுதியில் பேசப்படப் போகிறது என்பதை முதலில் யூகிக்கவே முடியவில்லை.



சேரன், தனது சக அதிகாரிகளின் ரிக்கார்ட் பைலை குப்பைத் தொட்டியில் போடுவதில் ஆரம்பித்து பல காட்சிகளுக்கு அரங்கத்தில் கை தட்டல்கள் தூள் பறத்தியது ஆச்சரியம். சேரன் பாலத்தின் மீது சண்டையிடும் காட்சியின் மூலம் அஞ்சாதேயில் பார்த்திருந்தாலும், இதுவும் ஈர்க்கப்படும் அளவுக்கு படமாக்கப்பட்டிருந்தது. சேரனின் நடிப்புல வாழ்க்கையின் அடையாளத்திற்கு  ஒரு சிறிய கிளிப்பிங்க்ஸ் இந்தச் சண்டைக் காட்சியில் இருந்து நிச்சயம் உருவப்படும். கண்ணைச் சிமிட்டாமல், இறுக்கமான முகத்துடன் ரவுடியின் நெஞ்சில் சேரன் தனது சிறிய கத்தியால் குத்திக் கொண்டே செல்லும் காட்சியில் தியேட்டரிலும் கை தட்டல்கள் பறந்தன.. அஹிம்சை எதிர்த்து ஹிம்சை வந்தால் அதனை அதன் வழியிலேயே எதிர்கொள் என்பதுதான்  இன்றைய தலைமுறையின் அறிவுரை போலும்.

தனக்குச் சரியாக பதில் சொல்லாத ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் “ஹெட்குவார்ட்டர்ஸ் போயி பேசிக்கலாமா..?” என்று அமைதியாகச் சீறுகிற காட்சியிலும், சேரனைத் திட்டும் அந்தப் பெண்ணிடம் கான்ஸ்டபிள் ஈ.ராமதாஸ் “பிரார்த்தல் கேஸ்ல உள்ள தூக்கிப் போட்டிருவேன்.. வாயை மூடு..” என்று மிரட்டும் காட்சியிலும் அடுத்தடுத்து கை தட்டல்கள்.. மிச்சம், மீதியை இறுதிக் காட்சியே அள்ளிக் கொண்டுவிட்டது.

சித்திரம் பேசுதடியிலும், அஞ்சாதேயிலும் நரேன் காட்டியிருந்த அதே உடல் மொழியினை இங்கேயும் சேரன் காட்டுகிறார். தலையைக் குனிந்திருப்பது, சண்டைக்குத் தயாராக நிற்பது.. கை முஷ்டிகளை எப்பவுமே விறைத்த நிலையில் வைத்திருப்பது என்று மிஷ்கின் அடியாள் போலவே ஆகியிருக்கிறார் சேரன். உடல் மொழியும் மிஷ்கினுக்கு ஒரு ஆயுதம்தான். இதில் சேரனின் தனது தங்கையிடமிருந்து வந்த போனை அட்டெண்ட் செய்யும் காட்சியும் ஒன்று. ஆனால் இத்தனை தூரம் கஷ்டப்பட்டவர் அந்த ஒரு நொடியில் தங்கைக்காக பிடிபட்டவனை பண்ட மாற்றம் செய்ய நினைக்கும் அந்த ஒரு செகண்ட்டில் திரைக்கதையாசிரியர் தோற்றுவிட்டாலும் சேரன் ஜெயித்துவிட்டார்.


இன்னுமொரு உதாரணம், ஒய்.ஜி.யின் மகள் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியுடன் அவளது அம்மா கண்கள் நிலை குத்தி நிற்க நிலைகுலைந்து போய் விழுவது. இறுதிக் காட்சியில்  தனது கணவனைத் தாக்குபவனின் தலையில் லஷ்மி கத்தியை இறக்குவது என்று பிரமிக்க வைத்திருக்கிறார் மிஷ்கின். இன்னும் ஆழமாக எழுதினால் இனி பார்க்கவிருப்போருக்கு எதிர்பார்ப்பில்லாமல் போய்விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

திருவல்லிக்கேணி தெருவில் சேரனும், அவரது குழுவினரும் ஓடுகின்ற காட்சியிலும், இன்ஸ்பெக்டரை தூக்க வந்த குவாலிஸ் காரை சேரனின் கார் துரத்துகின்ற காட்சியிலும் பின்னணி இசையைச் சொல்லி மாளவில்லை. இசையமைப்பாளர் பெயர் கே என்று மட்டுமே போட்டிருக்கிறார்கள். யார் என்று தெரியவில்லை.. அவருக்கு எனது பாராட்டுக்கள்.. படத்தில் எங்கே தேவையோ அங்கே மட்டும் இசையை வைத்து நிரப்பியிருக்கிறார். அதிலும் அத்தனையும் சோகம் ததும்பும் இசைக் குறியீடுகள்.. பல இடங்களில் மெளனம்தான்.. மெளனம்தான் எத்தனை எத்தனை கதைகளைச் சொல்கிறது படத்தில்..?

சேரன் சண்டையிடுவதற்காக இடம் தேடி நடக்கின்ற காட்சியில் தொடர்ச்சியாக இசையும், இசை இல்லாமலுமாக நம்மையும் தடக், தடக் நிலைமைக்கு கொண்டு போயிருக்கிறார். இயக்குதல் என்பது பயங்காட்டுதலும்கூடத்தான். ரொம்பவே காட்டியிருக்கிறார் மிஷ்கின்.

கைகள் துண்டாக்கப்படுவது. டிரில்லிங் மிஷினில் துளையிடுவது, விதவிதமாக கத்திகளைக் காண்பிப்பது என்று அடிவயிற்றில் சிலீர் உணர்வைத் தூண்டுகிறது. ஏ சர்டிபிகேட் கொடுத்தது சரியானதுதான். அதே சமயம் மனசாட்சிப்படி ஏ சர்டிபிகேட்டை நீக்க சமரசம் செய்து கொள்ளாமல் அதனைப் பெற்றுக் கொண்டு வெளியிட்டிருக்கும் மிஷ்கினுக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றி கலந்த பாராட்டுக்கள்.



சிறிய குழந்தைகள் நிச்சயமாக இதனைப் பார்க்கக் கூடாது. மிகவும் டிஸ்டர்பன்ஸாக இருக்கும். பல காட்சிகள் பெரியவர்களையே பயமுறுத்துகின்றன. ஒய்.ஜி.எம்.மின் மகன் ரோட்டோரமாக அமர்ந்திருக்கும் காட்சி, மனைவி நிற்கின்ற காட்சி, கார் அசுர வேகத்தில் வந்து மோதுவது, இறுதிக் காட்சியில் கடத்தப்பட்டவர்களைக் காட்டுவது.. என்று தொழில் நுட்பத்தில் குறை சொல்ல முடியாத அளவுக்கு பயம் காட்டுதல் தொடர்ந்திருக்கிறது.

இரவு நேரக் காட்சிகளின் படிமத்தை நிழல் பிடித்தாற்போன்று காட்டியிருப்பதும், கேமிரா எங்கு திரும்பினாலும் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சூழல்களும், இருப்பிடத்தை இப்படியும் காட்ட முடியுமா என்று யோசிக்க வைக்கும் கோணங்களுமாக புதிய ஒளிப்பதிவாளர் சத்யாவின் பங்களிப்பு இத்திரைப்படத்திற்கு இன்னொரு பலம். இவர் ஆனந்தவிகடனில் புகைப்படக்காரராக பணியாற்றியவர். விகடன் தயாரிப்பு. இவருக்கும் எனது பாராட்டுக்கள்.

மிஷ்கின் என்றாலே குத்துப்பாட்டு என்கிற அசிங்கமான ஒரு அடையாளத்தை தன்னையறியாமலேயே மிஷ்கினே திணித்துக் கொண்டிருக்கிறார். இதிலும் ஒரேயொரு பாடல். கன்னித்தீவு. அந்தப் பாடல் இல்லாமல் இருந்திருந்தால்கூட படத்திற்கு எவ்வித தொய்வும் ஏற்பட்டிருக்காது. இடைச்செருகலாகத்தான் இப்போதும் தெரிகிறது. பட விழாக்களுக்கு அனுப்பும்போது இதனை நீக்கிவிட்டு அனுப்பினால் நல்லது.



ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தப் பாடல் காட்சி மிஷ்கினின் வழக்கமான வித்தியாசமான நடன அசைவுகளாலும், பாடல் வரிகளாலும் கவனப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு முழுமைக்கும் ஈசன் படத்தின் ஜில்லா விட்டு ஜில்லா வந்த பாடலுடன்,  இப்பாடலும் மியூஸிக் சேனல்களில் போட்டியிடும் என்றே கருதுகிறேன்.


சாரு நிவேதிதா என்கிற மனிதரை என்னைத் தவிர வேறு யாருக்கும் அன்றைக்கு தியேட்டரில் தெரியாததால் அவர் தோன்றுகின்ற அரை நொடி காட்சியில் யாரும் பரவசமடைந்து கை தட்டவில்லை. ஒருவேளை அவர்களது காதல் இப்போதும் நீடித்திருந்தால் சாரு கொஞ்சம் வினாடிகள் அதிகமாகத் தெரிந்திருப்பாரோ என்னவோ.. ஆனால் இதுபோல் குரூப் டான்ஸரைப் போல் வருவதற்குப் பதிலாக ஒரு வில்லன் கேரக்டரையே சாருவுக்குக் கொடுத்திருக்கலாம். பின்னியிருப்பார். இப்போதைய சிச்சுவேஷனுக்கும் ஏற்றாற்போல் இருந்திருக்கும். கூடவே, தமிழ்ச் சமூகத்தின் மாபெரும் எழுத்தாளரை வசனம் பேசி, நடிக்க வைத்த பெருமையும் மிஷ்கினுக்குக் கிடைத்திருக்கும். வடை போச்சு மிஷ்கினுக்கு.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. சேரன் பணியாற்றுவது சிபிசிஐடி பிரிவு என்று சொல்கிறார்கள். இந்தப் பிரிவில் பணியாற்றும், கான்ஸ்டபிள்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், கண்காணிப்பாளர்கள் சீருடை அணிந்துதான் பணியாற்ற வேண்டும் என்பதில்லை. பெரும்பாலும் மப்டியில்தான் இருப்பார்கள்.

ஆனால் இவர்களுக்கான அதிகார அத்தாரிட்டி தனி டி.ஜி.பி. தலைமையில் இயங்குகிறது.. தனி ஹெட்குவார்ட்டர்ஸும் இருக்கிறது.. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தனிப் பிரிவு அலுவலகங்கள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் அந்தந்த மாநகர காவல்துறை ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வர மாட்டார்கள். சி.பி.சி.ஐ.டி.யின் மாநிலத் தலைமைக்கு மட்டுமே கட்டுப்படக் கூடியவர்கள்.



படத்தில் சிட்டி கமிஷனரின் உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், மூடப்பட்ட ஒரு வழக்கை நகர போலீஸ் கமிஷனரே சேரனிடம் விசாரிக்கச் சொல்வதுமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

லோக்கல் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்கள் வழக்கை சரிவர விசாரிக்கவில்லையெனில்தான் அதனை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றுவார்கள். அதுவும் மாநகர ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் சிபாரிசின் பேரில் மாநில சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.தான் இதற்கு உத்தரவிடுவார்.

சி.பி.சி.ஐ.டி. பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் நேரடியாக யாருடனும் தொடர்பில் இருக்க முடியாது என்பதால் நேர்மையாக வழக்கை நடத்துவார்கள் என்பது அனுமானம். சமீபத்தில் சேலத்தில் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டரின் குடும்பமே கொலை செய்யப்பட்ட வழக்கு இப்படித்தான் சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவர்களது விசாரணையின் கீழ்தான் சேலத்து தி.மு.க. புள்ளி பாரப்பட்டி சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.(லோக்கல் போலீஸ் இவரை விசாரிக்கக்கூட இல்லை.)  இந்தக் குழப்பத்தைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

அதேபோல் விசாரிக்கப் போகும்போது இதே மூன்று பேருடன்தான் போக வேண்டுமா..? கூடுதல் போலீஸாருடன்தான் போவார்கள். இதுபோல் போயிருந்தாலே படத்தில் பல முடிச்சுக்களை முன் பாதியிலேயே அவிழ்த்துவிட்டிருக்கலாம். ஆனால் சினிமாவுக்கு இறுதிக் காட்சிவரை கொண்டு போக வேண்டியிருந்ததால் அதையே மெயின்டெயின் செய்துவிட்டார் இயக்குநர். சரி.. பரவாயில்லை..

வெளியில் சத்தம்போடக்கூட தெரியாத ஒரு அப்பாவியின் குடும்பம் ஒரு கண கோபத்தில் எடுக்கின்ற முடிவு எந்த அளவுக்கு சமூகத்தைப் பாதிக்கிறது என்பதைத்தான் இந்தப் படம் உணர்த்துகிறது. சமூக விரோதிகளின் செயல்களைவிடவும், அடக்கி வைக்கப்பட்டவர்கள் திமிறி எழும்போது ஏற்படும் உணர்வுகள்தான் அதிக விளைவை ஏற்படுத்தும். இதைத்தான் இப்படமும் உணர்த்துகிறது. இப்படியும் ஒன்று நடந்தால் எப்படியிருக்கும் என்றும் சில கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது. நினைத்துப் பார்க்கத்தான் பயமாக இருக்கிறது.

இந்தியன் படம் வந்தபோது ஊருக்கு ஒரு இந்தியன் இது மாதிரியிருந்தால் என்ன என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குள்ளும் எழுந்ததே.. அது போன்ற பயம் கலந்த உணர்வை இது தெரியப்படுத்தியிருக்கிறது.


பணக்கார வர்க்கம், அதிகார வர்க்கம், அரசியல் வர்க்கம் மூன்றும் சேர்ந்து அப்பாவிகளை பலிகடா ஆக்கினால் அவர்களை எதிர்த்து யுத்தம் செய்துதான் ஜெயிக்க முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் மிஷ்கின். இறுதிக் காட்சியில் ஒய்.ஜி.எம்.மும், அவர் மனைவியும் செய்வது இதைத்தான். யுத்தத்தில் யார் ஜெயித்தார்கள்..? யார் தோற்றார்கள் என்பது விஷயமில்லை. ஒரு சாமான்யன் இவர்களை எதிர்த்து யுத்தம் செய்தான் என்பதுதான் வருங்காலத்திற்கு தரப்பட்டிருக்கும் செய்தி. அதைத்தான் இத்திரைப்படத்தில் பதிவு செய்திருக்கிறார் மிஷ்கின்.

எப்படி பார்த்தாலும் தமிழ்ச் சினிமா கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம் இது. சந்தேகமில்லை. குழந்தைகள் இல்லாமல் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.. பாருங்கள்.. 
Read more »

சிறுத்தை >> விமர்சனம்


பருத்தி கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம். இரட்டை ‌‌வேடத்தில் என்றாலும் ஒற்றை கார்த்திக்குத்தான் தமன்னா ஜோடி என்பது ஆறுதல். (இல்லையென்றால் அந்த கார்த்திக்கும் அவரது ஜோடிக்கும் நாலு டூயட்... இந்த கார்த்திக்கும் இவரது ஜோடிக்கும் நாலு டூயட் என்று மொத்த படத்தையம் முடித்திருப்பார்களே... அந்த வகையில் தப்பித்தோம் என்பதைத்தான் ஆறுதல் என்று சொல்கிறோம்)!

திருட்டையே தொழிலாக கொண்டவர் ஒரு கார்த்தி. அவர் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் கொண்டு வரும் ‌‌பெட்டியை நிறைய நகையும், பணமும் இருக்குமென்ற எண்ணத்தில் களவாடுகிறார். ஆனால் அதை திறந்தால் உள்ளே ஒரு அழகிய குழந்தை. திருட்டு ராஜாவான கார்த்தியை அந்த குழந்தை அப்பா என அழைக்க., கார்த்திக்கு தூக்கி வாரிப்போடுகிறது. அப்புறம்? அப்புறமென்ன... அந்த குழந்தையை திருட்டு கார்த்தியே வைத்து வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம். அதை வளர்த்தபடியே அதன் பெற்றோரை தேடி அலைகிறார் கார்த்தி. குழந்தையின் பெற்றோர் கிடைப்பதற்கு முன், அந்த தாதா குமபல் குழந்தையையும், அதை வளர்க்கும் கார்த்தியையும் தீர்த்துக் கட்ட துடியாய் துடிப்பதற்கு காரணம் என்ன? என்பதற்கு விடை சொல்ல வருகிறார் இன்னொரு கார்த்தி!. குழந்தையின் நிஜஅப்பாவான அவர், ஒரு காவல் அதிகாரியும் கூட! ஆந்திராவில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் அவரது நேர்மை பிடிக்காத ஆந்திர தாதாக்கள் சிலர்தான் குழந்தையையும், அதை வளர்க்கும் திருட்டு கார்த்தியையும் (போலீஸ் கார்த்தி என தவறுதலாக கருதி) போட்டுத் தள்ள துரத்துகின்றனர். தாதாக்களின் விருப்பம் நிறைவேறியதா? போலீஸ் அதிகாரியாக உருமாறிய கார்த்தி தாதாக்களை தவிடுபொடியாக்கினாரா? குழந்‌தையின் நிஜ அப்பாவான போலீஸ் கார்த்தி என்ன ஆனார்? தமன்னா - திருட்டு கார்த்தி இடையே காதல் ஏற்பட்டது என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு தெலுங்கு படங்களின் பாணியில் திகட்ட திகட்ட விடையளிக்கிறது மீதிக்கதை!

சகல திருட்டுக்ளிலும் கைதேர்ந்தவராக வரும் திருட்டு ராஜா கார்த்தியும் சரி, பிளாஷ் பேக்கில் போலீஸ் அதிகாரியாக மிடுக்கு காட்டும் கார்த்தியும் சரி... நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கின்றனர். அதிலும் திருட்டு ‌கார்த்தி, போலீஸ் கார்த்தியை பல இடங்களில் ஓவர்டேக் செய்து தியேட்டரை அதிர வைக்கிறார் என்றால் மிகையல்ல. சந்தானத்துடன் பண்ணும் காமெடியில் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகிறார் அவர். வாழ்க்கையில் எத்தனையோ இடத்துல திருடியிருக்கேன்... இப்படி மெடிக்கல் ஷாப்பில் திருட ‌வச்சிட்டியேடா... என கார்த்தியிடம் சந்தானம் பண்ணும் அலப்பறையும், ஆளாளுக்கு டேய்ய்ய்ய்னு கத்துறீங்களே... அது என்ன ரவுடிகளோட ரிங் டோனா? என்று சந்தானம் சதாய்க்கிற காட்சியிலும் செம அப்ளாப்ஸ்! தியேட்டரே சிரிப்பில் குளோஸ்!!

தமன்னா, கார்த்திக்கு ‌பொருத்தமான ஜோடி. திருடனை நல்லவன் என ஏமாந்து இவர் காதல் பண்ணும் காட்சிகள் செம கலகலப்பு!

ஆந்திர கிராமம், மூன்று தாதா... அடிமை கிராமம் என போலீஸ் கார்த்திக்காக விரியும் பிளாஷ் பேக்கும், போலீஸ் அதிகாரியை தீர்த்துக் கட்டும் ஆந்திர ரவுடிகள், திருடன் கார்த்தியிடம் மண்ணை கவ்வுவதும் தெலுங்கு சினிமாவுக்கு வேண்டுமானால் ஓ.கே.! தமிழுக்கு?!

வித்யாசாகரின் வித்தியாச இசை, க.வேல்ராஜின் பிரமாண்ட பளிச் ஒளிப்பதிவு என ஆயிரம் வசதிகள் இருந்தும் சிவாவின் இயக்கத்தில் ஏதோ ஒன்று இல்லாததால் தை முதல்நாளில் வெளிவந்திருக்கும் சிறுத்தை கவரவில்லை கருத்தை!
Read more »

கார்த்தியின் இன்னொரு வெற்றிப்படம்!

தமிழ் சினிமாவின் வெற்றிகள் எல்லாம் இனிவரும் காலத்தில் சிவகுமார் அன்ட் கோவுக்கு போகப்போகிறது போல் தெரிகின்றது. நடிப்பில் ஒரு பக்கம் சூர்யாவும், மறுபக்கம் கார்த்தியும் பின்னிப் பெடலெடுக்கிறார்கள். வெற்றிகளை மாறி மாறி இவர்களே ருசிக்கிறார்கள்.
 
ஸ்ரூடியோ கிறீன் எஸ்.ஜி.ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் கார்த்தி நடித்து பொங்கல் வெளியீடாக வந்துள்ள படம் சிறுத்தை. விக்ரமார்குடு தெலுங்கு படத்தின் ரீமேக் தான் இந்தப்படம். தெலுங்கு மூலக்கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சிவா. படத்தில் தமன்னா, சந்தானம், சந்தானபாரதி, மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

சரி படத்தோட கதை என்ன?
சென்னையில்; காமெடி பீஸ_களாக கார்த்தியும், சந்தானமும் கொள்ளையடித்துத் திரிகிறார்கள். ஒருமுறை கல்யாண வீட்டில் திருடப் போகும் போது தமன்னாவைச் சந்திக்கிறார் கார்த்தி. மனதை பறிகொடுக்கிறார் (இடுப்பில்). ஏற்கனவே கார்த்தியின் கை வைத்தியத்தால் தமன்னா காப்பற்றப்பட்டிருக்கிறார். அதனால் தமன்னாவும் கார்த்தி மீது காதல் கொள்கிறார். தமன்னாவுக்காக கூட வந்த திருட்டுத் தோழன் சந்தானத்தை பிடித்துக் கொடுத்து நல்ல பேர் வாங்குகிறார் கார்த்தி.

ஒரு முறை 200 பவுண் நகையைத் தூக்குவதாக நினைத்து பெண் குழந்தை ஒன்றை கொண்டு வந்துவிடுகிறார்கள் இருவரும். திறந்துபார்த்த இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள. கண் விழித்த குழந்தை கார்த்தியை அப்பா என்கிறது. இதனால் பெரும் குழப்பங்கள். கார்த்தியை பார்க்க பெற்றோருடன் வரும் தமன்னா குழந்தையைக் கண்டதும் அதிர்ச்சியாகி அழுது புலம்புகிறார். குழந்தையை விட்டு தன்னுடன் வரும்படி அழைக்கிறார். குழந்தை தந்தையின் காலை கட்டி நிற்கிறது. இதேவேளை கார்த்தியையும், குழந்தையையும் கொல்ல ஒரு கூட்டம் திரிகிறது.

குழந்தை யாருடையது? கார்த்தி - குழந்தையைக் கொல்லத் திரியும் கூட்டம் யார்? கார்த்தி - தமன்னா சேர்ந்தார்களா என்பதை திரையில் காண்க. பல சுவாரசியமான திருப்பங்களும், நகைச்சுவையும் படத்தில் விரவிக் கிடப்பதனால் இன்று தவற விட்டவர்கள் நாளை பொங்கலை வெள்ளித்திரையுடன் கழியுங்கள்.

படத்தில் கார்த்தி இரட்டை வேடம். முதன்முறையாக அவர் ஏற்கும் இரட்டை வேடம் இது. கூடவே பொலிஸ் வேறு. பரட்டை தலையும், மூக்கின் மேலே ஒரு தழும்புமாக ஒரு கார்த்தியும்.. முறுக்கு மீசையுடன் விறைப்பாக, கம்பீரமாக இன்னொரு கார்த்தியும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். காமெடியில் புகுந்து விளையாடியிருக்கிறார் கார்த்தி. தமன்னாவின் இடுப்பை பார்க்கும் போது வெட்கப்படுவார் பாருங்க... சான்ஸே இல்ல... மிஸ்டர் சூர்யா! உங்களுக்கு வில்லன் இப்பிடி ஒரே வீட்டையா வளரணும்?

தமன்னா அழகுப்பதுமை. வெளேரெண்ட இடுப்பை அடிக்கடி காட்டி இம்சை பண்ணுகிறார். நவீன சீதை போலும்... கொடியிடை... நடிப்பு ஒட்டவில்லை. ஆனால் நளினங்கள் நன்றாகவே இருக்கின்றது. பாடல்களில் கவர்ச்சி விருந்தையே படைக்கிறார்கள்.

சந்தானத்தின் காமெடிகளில் வயிறு வலித்து விடுகிறது. கொள்ளையிட்ட பொருளை இருவரும் பங்கு பிரித்துக் கொள்ளும் காட்சிகளும், பொலிஸ் ஒருவர் சந்தானத்தின் பிரதான இடத்தைக் 'குறி' பார்ப்பதும், மாட்டிவிட்ட நண்பனுடன் படும் அவஸ்தையும் கலக்கல்.

தெலுங்கு வில்லன்கள் உருவத்திலும் சரி, செயற்பாடுகளிலும் சரி அருவருப்பை வர வைக்கிறார்கள். இந்த கொடூரங்களை குறைத்திருக்கலாம். இடையிடையே வந்து போகும் சந்தானபாரதி, மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலர் ரசிக்க வைக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தியே ஒரு சோகம், அண்மையில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சோபனா நடித்திருப்பது. தமிழ்சினிமாவிலுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய நகைச்சுவைப் பெண்களில் ஒருவர் இல்லாதது பேரிழப்புத் தான்.

முதல் பாதியின் பெரும்பகுதி நகைச்சுவையில் கழிந்தாலும் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால் படத்தின் நிறைவை நகைச்சுவையாகக் காட்டி படத்தின் தரத்தைக் குறைத்தவிட்டார் இயக்குனர். ஆரம்பத்தில் கொடூரமானவர்களாக தெரிந்த வில்லன்கள் கடைசியில் காமெடி பீஸ_களாக ஏமாறுவது சலிப்பை உண்டு பண்ணுகிறது. ஆனாலும் இயக்குனரின் வசனங்களில் தூள் பறக்கிறது. காக்கிச் சட்டையுடன் பேசும் வசனங்களாகட்டும், காமெடி வசனங்களாகட்டும் கைதட்டை அள்ளிக்கொள்கிறது.

வித்தியாசாகர் இசையில் பாடல்கள் ரசிக்கும் படி உள்ளது. பின்னணி இசையும் நன்றாகவே உள்ளது. கார்த்தியின் கை வித்தைக்கு கொடுக்கும் இசை இன்னும் பிரமாதம். கலை இயக்குனர் ராஜீவன். கார்த்தியின் இருப்பிடம் கலைப் பொக்கிஸமாக தெரிகிறது. (கொள்ளைப் பொருட்கள்). சண்டைப்பயிற்சி படு தூள். படத்தொகுப்பு வி.ரி.விஜயன். பாடல்கள், சண்டைக்காட்சிகளை அழகாக செதுக்கியிருக்கிறது.

Read more »
 
-