ஆப்பிள் நிறுவனம் - சர்ச்சை!




ப்பிள் நிறுவனம் தனது புதிய MacBook மடிக்கணினியில் அனைத்து USB / HDMI Port களையும் நீக்கி, ஒரே ஒரு USB-C என்ற Port வசதியை மட்டும் கொடுத்து இருப்பது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
வழக்கம் போல இதைப் பயன்படுத்துபவர்களை விட மற்றவர்கள் தான் அதிகம் கொந்தளித்துக் கொண்டுள்ளார்கள். 
அது எப்படி ஒரே ஒரு USB Port மட்டும் கொடுக்கலாம்? இது ரொம்பக் குறைவு! இதெல்லாம் போதவே போதாது, ஆப்பிள் நிறுவனம் இதை வைத்துக் கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறது என்று விவாதம் செய்து கொண்டுள்ளார்கள்.
பின்வரும் படத்தில் உள்ள Model USB-A & USB-B தான் நம் பெரும்பான்மையான பயன்பாட்டில் உள்ளவை.
USB-type-C
USB-A USB Stick / External Harddisk போன்றவற்றை இணைக்கப் பயன்படுத்துவோம்.
USB-B பெரும்பாலும் கேமராக்கு பயன்படுத்துவோம்.
USB-C தற்போது ஆப்பிள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இதை ஏற்கனவே சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி இருந்தாலும், ஆப்பிள் நிறுவனம் கொண்டு வந்த பிறகு ஒரே ஒரு Port என்பதால் சர்ச்சைக்குள்ளாகி அனைவருக்கும் அறிமுகமாகியது. 
மேலும் சில USB Models 
USB Models
சர்ச்சையின் துவக்கம் CD Drive
துவக்கத்தில் மடிக்கணினி மிகப் பெரியதாக அதிக எடையுள்ளதாக இருந்தது. பின் நாளடைவில் இதனுடைய அளவு குறைந்து கொண்டே வருவதை அனைவரும் அறிந்து இருப்பீர்கள்.
ஆப்பிள் நிறுவனம் முதலில் CD Drive (தற்போது DVD Drive) இல்லாத கணினியை அறிமுகப்படுத்திய போது, இதே போல எதிர்ப்பு வந்தது.
அதற்கு ஆப்பிள் நிறுவனம், CD பயன்பாடு குறைந்து வருகிறது, இனி அனைத்துமே இணையம் மூலமே பெற்றுக் (தரவிறக்கம்) கொள்ளலாம். எனவே, CD பயன்பாடு எதிர்காலத்தில் இருக்காது என்று கூறி விட்டது.
இதற்கு அந்தச் சமயத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.
பின்னர்ச் சில வருடங்களுக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் கூறியது போலவே ஆகி தற்போது CD Drive பயன்பாடு முற்றிலும் குறைந்து விட்டது. துவக்கத்தில் இயங்கு தளம் நிறுவ மட்டுமே பயன்பட்டது, தற்போது  இதைப் பயன்படுத்துபவர்கள் குறைந்து விட்டார்கள்.
எதோ பேருக்கு இருந்து கொண்டு இருக்கிறது. உங்களுடைய கணினியில் எப்போது கடைசியாக DVD பயன்படுத்தினீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்!
தற்போது எடை குறைவாக வரும் மடிக்கணிகள் DVD Drive தவிர்த்து விடுகின்றன. தேவைப்பட்டால் External DVD Drive வாங்கிக்கொள்ளலாம்.
நான் DVD Drive இல்லாத Lenovo மடிக்கணினி வாங்கி 4 வருடங்கள் ஆகிறது. இதனுடன் இலவசமாக External DVD Drive கொடுத்தார்கள் ஆனால், இதைப் பயன்படுத்தியது இரண்டு முறை இருந்தாலே அதிகம்.
தற்போது நான் பணி புரியும் நிறுவனத்தில் மடிக்கணினியுடன் இணைந்து DVD Drive வாங்குவதை முற்றிலும் நிறுத்தி விட்டோம்.
Adobe Flash in Mobile
இதன் பின்னர் “Adobe Flash அதிகம் சக்தியை (resource) எடுக்கிறது, பாதுகாப்பு இல்லை, பேட்டரி விரைவில் குறைகிறது. எனவே, ஆப்பிள் நிறுவனம் இதை மொபைலில் பயன்படுத்தாது.
ஆனால், கணினியில் தொடரும். இனி HTML 5 தொழில்நுட்பம் தான் எதிர்காலம்” என்று ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிவித்தார்.
மிகப்பெரிய அறிவிப்பு. இது இணைய உலகில் பெரிய சர்ச்சையானது. இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் தன் முடிவில் இருந்து மாறவில்லை.
பின்னர் விரைவிலேயே Adobe நிறுவனம் இதை ஏற்றுக்கொண்டு, HTML 5 தான் இனி எதிர்காலம் என்று கூறி விட்டது.
தற்போதும் Flash பயன்படுத்தும் தளங்கள் கவர்ச்சிகரமாக இருந்தாலும், பாதுகாப்பில் கேள்விக் குறியாகவே உள்ளது.
USB-C
Apple USBC - Cஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்த பிறகு பொறுப்பிற்கு வந்த “டிம் குக்” காலத்தில் தற்போது “ஒரே ஒரு USB-C” என்ற மிகப்பெரிய முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இணையத்தில் கரித்துக்கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய கணினியில் அனைத்து வகை Port களையும் நீக்கி ஒரே ஒரு USB-C என்ற வசதியை மட்டும் கொடுத்து இருக்கிறது. வேறு வகையில் கூறுவதென்றால் VGA, USB-A, USB-B, HDMI, eSATA போன்ற Port களை நீக்கி விட்டது.
அதாவது எந்தக் கூடுதல் சாதனத்தைப் பயன்படுத்த வேண்டி இருந்தாலும் இதற்கான Hub நீங்கள் பெற்றாக வேண்டும். பின் வரும் படம் எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்குகிறது.
USB C - HUB converter
அதுவும் Power Cable இணைக்கவும் இதே USB-C Port டையே பயன்படுத்த வேண்டும் என்பது தான் பலரை கோபத்தில் ஆழ்த்தி விட்டது என்று நினைக்கிறேன். 
எந்தச் சாதனத்தை இணைப்பது என்றாலும் இந்த Port ல் தான் இணைக்க முடியும். உதாரணத்திற்கு ஒருவர் ஒரே சமயத்தில் Mouse, Printer, External Keyboard, Projector, USB Stick சாதனம் இணைக்க வேண்டும் என்றால், இதில் செய்ய முடியாது.
ஏனென்றால், இதில் ஒரே ஒரு Port தான் இருக்கிறது. இது செயலிழந்தாலோ, சேதமடைந்தாலோ பெரும் சிக்கல்.
ஆப்பிள் நிறுவனத்தில் அனைத்துப் பொருட்களும் விலை அதிகம் என்பது அனைவரும் அறிந்தது. எனவே, இதையும் (HUB) கட்டாயமாக வாங்க வேண்டிய நிலை ஆகிறது. இதனால் கூடுதலாக 19 USD அல்லது 79 USD செலவழிக்க வேண்டியது இருக்கும்.
அதோடு இந்த மடிக்கணியைப் பயன்படுத்துபவர்கள் USB Stick பயன்படுத்த வேண்டும் என்றால் USB-C வசதி உள்ள USB Stick வாங்க வேண்டும்.
இல்லையென்றால் மேலே உள்ள கன்வெர்ட்டர் (USB-C –> USB-A) வாங்க வேண்டும்.
சிறியதாக இருக்கணும் ஆனால், எல்லாமும் வேண்டும்!
நம் மக்கள் மடிக் கணினி சிறியதாக வேண்டும் என்பார்கள் ஆனால், அதில் அனைத்து வசதிகளும் பழைய மடிக்கணி போலவே இருக்கணும் என்பார்கள். இது எப்படிச் சாத்தியம்?
இது எப்படி இருக்கிறது என்றால், வாலி படத்தில் விவேக்கிடம் பாலாஜி ஒரே மாத்திரையில் அனைத்து நோயும் குணமாகனும்!! என்று கேட்பாரே அது போல இருக்கிறது  .
ஆப்பிள் நிறுவனம் என்ன கூறுகிறது என்றால், இனி எதிர்காலம் Wifi தான். எதைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் WIfi இருந்தாலே போதும் கூடுதல் Port தேவையில்லை என்று கூறுகிறது. DVD Drive போல இந்தப் Port களின் பயன்பாடும் குறைந்து விடும் என்கிறது.
ஆப்பிள் நிறுவனம் கூறுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் அவர்கள் கூறுவதில் உண்மையில்லாமல் இல்லை.
ஏன் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை?
ஆப்பிள் நிறுவனம் வளர்ச்சி அடைந்த நாடுகளை வைத்தே இதைச் செயல்படுத்தியிருக்கிறது. வளர்ந்த நாடுகளில் WIfi என்பது எங்கும் கிடைக்கும் ஒரு வசதியாகி விட்டது.
எனவே, எந்தச் சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றாலும் Printer, Projector, Mouse, External keyboard & Power Supply உட்பட Wifi இருந்தாலே போதும்.
இந்தியா போன்ற நாடுகளில் Wifi தற்போது தான் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதன் முழுமையான பயனைப் பெற வருடங்கள் ஆகும். வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே அனைத்திலும் Wifi வசதி இருக்கிறது என்று எதிர்பார்க்க முடியாது.
நாம் உண்மையிலேயே அனைத்தையும் பயன்படுத்துகிறோமா!
பதட்டப்படாமல் யோசித்தால், உண்மையில் அனைவரும் ஒரே சமயத்தில் அனைத்து சாதனங்களையும் பயன்படுத்துவது என்பது குறைவு, எப்போதாவது வரலாம்.
உங்களுக்குச் சிறிய மடிக்கணினி தேவையென்றால் சில நடைமுறை சிரமங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இவை தவிர்க்கவே முடியாது.
ஆப்பிள் நிறுவனம் MacBook கணினியில் மட்டுமே இந்த ஒரே ஒரு USB-C வசதியைக் கொண்டு வந்து இருக்கிறது. MacBook Pro வகை மடிக்கணினியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதில் வழக்கம் போலப் பல வகை Port கள் உள்ளன.
இது முற்றிலும் ஒருவரின் விருப்பம் சார்ந்ததே! யாரும் இதை வாங்கி ஆகணும் என்று கட்டாயப்படுத்தவில்லை. இதில் நமக்குத் தேவையான வசதிகள் இல்லையென்றால் புறக்கணித்து விட்டு நம் தேவைக்குத் தகுந்த கணினி வாங்கிக்கொள்ளலாம்.
ஆப்பிள் இல்லைனா இன்னொரு நிறுவனத்தின் மடிக்கணினி அவ்வளோ தான். தேவை இருப்பவர்கள் வாங்கப்போகிறார்கள் மற்றவர்கள் புறக்கணிக்கப் போகிறார்கள்.
இதற்கு ஏன் சண்டை?!
தற்போது சிரமமாக இருந்தாலும், எதிர்காலத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் முடிவையே அனைவரும் பின்பற்றுவார்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அதாவது கூடுதல் Port பயன்பாடு குறைந்து விடும்.
என்னுடைய விண்டோஸ் கணினியில் நான் எப்போதாவது USB Stick / External Hard Disk பயன்படுத்துகிறேன். மற்றபடி தொடர்ச்சியாக எந்தச் சாதனத்தையும் இணைப்பதில்லை. எனவே, ஆப்பிள் நிறுவனத்தின் முடிவு வரும் காலத்தில் சரி என்றே நிரூபிக்கப்படும்.
ஒரு Port வைத்ததற்குப் பதிலாக இரண்டு Port வைத்து இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. இது கூட “லாம்” தான்.
ஆப்பிள் இந்தக் கணினியை அறிமுகப்படுத்திய போது வாங்கலாம் என்று நினைத்து இருந்தேன் ஆனால், ஒரே ஒரு Port என்பதை அறிய வந்த போது, வாங்கும் எண்ணத்தை ஒத்தி வைத்து விட்டேன்.
பின்னாளில் இதையே வாங்கலாம் அல்லது வேறு கணினியை வாங்கலாம். அப்போதைய மனநிலையைப் பொறுத்தது.
கொசுறு
இணையத்தில் இரண்டு பெரிய குழுக்கள் உள்ளது. ஆப்பிள் ஆதரவாளர்கள் / எதிர்ப்பாளர்கள். ஆப்பிள் எந்தத் தயாரிப்பை வெளியிட்டாலும் இரண்டு வாரத்திற்கு இணையம் ரத்த பூமியாக இருக்கும். சண்டை சண்டை சண்டை தான்.
ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகள் விலை அதிகம் என்பதாலும், பயன்படுத்த சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாலும் இதைக் கிண்டலடித்து அவ்வப்போது MEME வரும். ஆப்பிள் நிறுவனத்தின் விலையைக் கிண்டலடித்தாலும் அதனுடைய தரம் எவராலும் கொடுக்க முடியாது.
எங்கள் அலுவலகத்தில் Corporate Mobile 75% iPhone (நான் உட்பட) தான் ஆனால், பிரச்சனை என்று இது வரை ஒரே ஒரு iPhone தான் கடைசி இரண்டு வருடத்தில் புகார் வந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கணினி, கணினி, iPhone என்று எதுவுமே முதலில் வாங்கும் போது மட்டுமே அதிக முதலீடு ஆனால், இதன் மறு விற்பனை மதிப்பு (Resale value) அதிகம். எனவே, பழைய சாதனத்தை விற்று புதிய சாதனம் அதிக முதலீடு இல்லாமல் வாங்க முடியும்.
நான் ஆப்பிள் ரசிகனல்ல ஆனால், இதைப் பயன்படுத்துபவன் என்ற முறையில் இதன் தரத்தை உணர்ந்தவன். பின்னாளில் Google Nexus முயற்சிக்கலாம் என்ற யோசனை இருக்கிறது.

1 கருத்துகள்:

Athavan DS சொன்னது…

amazing sanjuuuuuuuuuuuuuu

கருத்துரையிடுக

 
-