யுத்தம் செய் - சினிமா விமர்சனம்

மிஷ்கினின் மற்றுமொரு சிறந்த படைப்பு. மனதைக் கொள்ளை கொள்ளும் இயக்கம் என்றால் என்னவென்பதை உதவி, துணை, இணை இயக்குநர்களுக்காக மிஷ்கின் எடுத்திருக்கும் 4-வது திரைப்பாடம்.


உலகத்தின் புராதனத் தொழிலான பாலியல் துறையின் நவீனமயமாக்கலில் Bizarre என்றழைக்கப்படும் காம சேடிஸத்தையும், அதனை ரசித்து அனுபவிக்கும் மேட்டுக்குடி மக்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுயிருக்கிறது இந்தப் படம். நிச்சயமாக தமிழ்ச் சூழலுக்கு இதன் கதை புதிதுதான்.

தினவெடுத்த பணம் கொழுத்த முதலாளிகள் தங்களது ஆற்றாமையை போக்கிக் கொள்ள அப்பாவி இளம்பெண்களைப் பயன்படுத்திக் கொள்ளும் சூழலில் சிக்கிக் கொண்டு ஒரு அபலைப் பெண் உயிரைவிடுகிறாள். அவளது உயிருக்காக அதுவரை சமையலறையில் மட்டுமே கத்தியைப் பிடித்திருந்த அந்தப் பெண்ணின் தாயும், தந்தையும், தம்பியும் போஸ்ட்மார்ட்டம் ஸ்பெஷலிஸ்ட்டுகளை போல பதிலுக்குப் பதில் கொடுப்பதுதான் கதை.

முதல் காட்சியில் இருந்து இறுதிவரையில் மிஷ்கினின் சாம்ராஜ்யம்தான். அதே Wide Angle Shots. Long Shots.. கிடைத்த இடங்களில் மட்டுமே பின்னணி இசை.. அந்த இசையிலும் ஓட வைப்பவை.. மனதை லயிக்க வைப்பவை.. அழுக வைப்பவை என்று வெரைட்டியாக வயலினும், பியானோவும் கலந்து கட்டி அடித்து கதைக்குள் நம்மை தள்ளி விடுகின்றன.

சேரன் இதுவரையில் நடித்த படங்களிலேயே சிறந்த படம் இது. அவர் தனது படங்களை விட்டுக் கொடுக்க முடியாமல் இல்லை என்று கூறினாலும் இதுதான் உண்மை. அவர் தானே நடித்து தன்னை இயக்கிய திரைப்படங்களில் காட்டியது தமிழ்ச் சினிமாவின் ரசிகனை சமாதானப்படுத்த அவர் செய்து கொண்ட சமரசமான ஒரு நடுத்தர வர்க்க அடையாளம்தான் தெரிந்திருந்தது. ஆனால் இதில் வெறும் சேரன் மட்டுமே..



ஹீரோ இருக்கிறார். ஹீரோயின் இல்லை. காமெடியன் இல்லை.. ஆனால் வில்லன்களுக்கு பஞ்சமில்லை. இதில் யார் நிஜ வில்லன்..? யார் நிஜமில்லாத வில்லன் என்பதை படத்தின் முக்கால் பாகம் வரையிலும் சஸ்பென்ஸாகவே கொண்டு போயிருப்பதுதான் படத்தின் பலமே..

ஊரின் பல இடங்களில் வைக்கப்படும் அட்டைப் பெட்டியில் கிடக்கும் கைகளைப் பார்த்து விசாரணையைத் துவக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரான சேரனுக்கு ஏற்கெனவே இருக்கும் ஒரு பிரச்சனையைத் தெளிவாக்கிவிட்டுத்தான் காட்சியையே துவக்கியிருக்கிறார் இயக்குநர். இதனால் இயக்குநருக்குக் கிடைத்த பலம் சேரனின் இறுக்கமான முகம். உடல்வாகு போலீஸ்போல் இல்லாவிட்டாலும் நடை, உடை, பாவனை மூலம் சேரனை போலீஸ்காரனாகக் காட்டிவிட்டார் மிஷ்கின்.



காட்சியமைப்புகளை இப்படித்தான் மிஷ்கின் வைத்திருப்பார் என்ற ஊகத்தில் அவரது பெரும் ரசிகர்களான என்னைப் போன்றவர்கள் பலர் இருந்தாலும், எதுவுமில்லாமல் திரையரங்கிற்கு வந்தவர்களும் பிரமித்துத்தான் போனார்கள்.

போஸ்ட்மார்ட்டம் அறையை இவ்வளவு துல்லியமாக அலசியது இந்தத் தமிழ்ப் படமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஜெயப்பிரகாஷின் அந்த வேடம், இறுதியில் பேசப்படப் போகிறது என்பதை முதலில் யூகிக்கவே முடியவில்லை.



சேரன், தனது சக அதிகாரிகளின் ரிக்கார்ட் பைலை குப்பைத் தொட்டியில் போடுவதில் ஆரம்பித்து பல காட்சிகளுக்கு அரங்கத்தில் கை தட்டல்கள் தூள் பறத்தியது ஆச்சரியம். சேரன் பாலத்தின் மீது சண்டையிடும் காட்சியின் மூலம் அஞ்சாதேயில் பார்த்திருந்தாலும், இதுவும் ஈர்க்கப்படும் அளவுக்கு படமாக்கப்பட்டிருந்தது. சேரனின் நடிப்புல வாழ்க்கையின் அடையாளத்திற்கு  ஒரு சிறிய கிளிப்பிங்க்ஸ் இந்தச் சண்டைக் காட்சியில் இருந்து நிச்சயம் உருவப்படும். கண்ணைச் சிமிட்டாமல், இறுக்கமான முகத்துடன் ரவுடியின் நெஞ்சில் சேரன் தனது சிறிய கத்தியால் குத்திக் கொண்டே செல்லும் காட்சியில் தியேட்டரிலும் கை தட்டல்கள் பறந்தன.. அஹிம்சை எதிர்த்து ஹிம்சை வந்தால் அதனை அதன் வழியிலேயே எதிர்கொள் என்பதுதான்  இன்றைய தலைமுறையின் அறிவுரை போலும்.

தனக்குச் சரியாக பதில் சொல்லாத ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் “ஹெட்குவார்ட்டர்ஸ் போயி பேசிக்கலாமா..?” என்று அமைதியாகச் சீறுகிற காட்சியிலும், சேரனைத் திட்டும் அந்தப் பெண்ணிடம் கான்ஸ்டபிள் ஈ.ராமதாஸ் “பிரார்த்தல் கேஸ்ல உள்ள தூக்கிப் போட்டிருவேன்.. வாயை மூடு..” என்று மிரட்டும் காட்சியிலும் அடுத்தடுத்து கை தட்டல்கள்.. மிச்சம், மீதியை இறுதிக் காட்சியே அள்ளிக் கொண்டுவிட்டது.

சித்திரம் பேசுதடியிலும், அஞ்சாதேயிலும் நரேன் காட்டியிருந்த அதே உடல் மொழியினை இங்கேயும் சேரன் காட்டுகிறார். தலையைக் குனிந்திருப்பது, சண்டைக்குத் தயாராக நிற்பது.. கை முஷ்டிகளை எப்பவுமே விறைத்த நிலையில் வைத்திருப்பது என்று மிஷ்கின் அடியாள் போலவே ஆகியிருக்கிறார் சேரன். உடல் மொழியும் மிஷ்கினுக்கு ஒரு ஆயுதம்தான். இதில் சேரனின் தனது தங்கையிடமிருந்து வந்த போனை அட்டெண்ட் செய்யும் காட்சியும் ஒன்று. ஆனால் இத்தனை தூரம் கஷ்டப்பட்டவர் அந்த ஒரு நொடியில் தங்கைக்காக பிடிபட்டவனை பண்ட மாற்றம் செய்ய நினைக்கும் அந்த ஒரு செகண்ட்டில் திரைக்கதையாசிரியர் தோற்றுவிட்டாலும் சேரன் ஜெயித்துவிட்டார்.


இன்னுமொரு உதாரணம், ஒய்.ஜி.யின் மகள் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியுடன் அவளது அம்மா கண்கள் நிலை குத்தி நிற்க நிலைகுலைந்து போய் விழுவது. இறுதிக் காட்சியில்  தனது கணவனைத் தாக்குபவனின் தலையில் லஷ்மி கத்தியை இறக்குவது என்று பிரமிக்க வைத்திருக்கிறார் மிஷ்கின். இன்னும் ஆழமாக எழுதினால் இனி பார்க்கவிருப்போருக்கு எதிர்பார்ப்பில்லாமல் போய்விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

திருவல்லிக்கேணி தெருவில் சேரனும், அவரது குழுவினரும் ஓடுகின்ற காட்சியிலும், இன்ஸ்பெக்டரை தூக்க வந்த குவாலிஸ் காரை சேரனின் கார் துரத்துகின்ற காட்சியிலும் பின்னணி இசையைச் சொல்லி மாளவில்லை. இசையமைப்பாளர் பெயர் கே என்று மட்டுமே போட்டிருக்கிறார்கள். யார் என்று தெரியவில்லை.. அவருக்கு எனது பாராட்டுக்கள்.. படத்தில் எங்கே தேவையோ அங்கே மட்டும் இசையை வைத்து நிரப்பியிருக்கிறார். அதிலும் அத்தனையும் சோகம் ததும்பும் இசைக் குறியீடுகள்.. பல இடங்களில் மெளனம்தான்.. மெளனம்தான் எத்தனை எத்தனை கதைகளைச் சொல்கிறது படத்தில்..?

சேரன் சண்டையிடுவதற்காக இடம் தேடி நடக்கின்ற காட்சியில் தொடர்ச்சியாக இசையும், இசை இல்லாமலுமாக நம்மையும் தடக், தடக் நிலைமைக்கு கொண்டு போயிருக்கிறார். இயக்குதல் என்பது பயங்காட்டுதலும்கூடத்தான். ரொம்பவே காட்டியிருக்கிறார் மிஷ்கின்.

கைகள் துண்டாக்கப்படுவது. டிரில்லிங் மிஷினில் துளையிடுவது, விதவிதமாக கத்திகளைக் காண்பிப்பது என்று அடிவயிற்றில் சிலீர் உணர்வைத் தூண்டுகிறது. ஏ சர்டிபிகேட் கொடுத்தது சரியானதுதான். அதே சமயம் மனசாட்சிப்படி ஏ சர்டிபிகேட்டை நீக்க சமரசம் செய்து கொள்ளாமல் அதனைப் பெற்றுக் கொண்டு வெளியிட்டிருக்கும் மிஷ்கினுக்கும், தயாரிப்பாளருக்கும் எனது நன்றி கலந்த பாராட்டுக்கள்.



சிறிய குழந்தைகள் நிச்சயமாக இதனைப் பார்க்கக் கூடாது. மிகவும் டிஸ்டர்பன்ஸாக இருக்கும். பல காட்சிகள் பெரியவர்களையே பயமுறுத்துகின்றன. ஒய்.ஜி.எம்.மின் மகன் ரோட்டோரமாக அமர்ந்திருக்கும் காட்சி, மனைவி நிற்கின்ற காட்சி, கார் அசுர வேகத்தில் வந்து மோதுவது, இறுதிக் காட்சியில் கடத்தப்பட்டவர்களைக் காட்டுவது.. என்று தொழில் நுட்பத்தில் குறை சொல்ல முடியாத அளவுக்கு பயம் காட்டுதல் தொடர்ந்திருக்கிறது.

இரவு நேரக் காட்சிகளின் படிமத்தை நிழல் பிடித்தாற்போன்று காட்டியிருப்பதும், கேமிரா எங்கு திரும்பினாலும் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத சூழல்களும், இருப்பிடத்தை இப்படியும் காட்ட முடியுமா என்று யோசிக்க வைக்கும் கோணங்களுமாக புதிய ஒளிப்பதிவாளர் சத்யாவின் பங்களிப்பு இத்திரைப்படத்திற்கு இன்னொரு பலம். இவர் ஆனந்தவிகடனில் புகைப்படக்காரராக பணியாற்றியவர். விகடன் தயாரிப்பு. இவருக்கும் எனது பாராட்டுக்கள்.

மிஷ்கின் என்றாலே குத்துப்பாட்டு என்கிற அசிங்கமான ஒரு அடையாளத்தை தன்னையறியாமலேயே மிஷ்கினே திணித்துக் கொண்டிருக்கிறார். இதிலும் ஒரேயொரு பாடல். கன்னித்தீவு. அந்தப் பாடல் இல்லாமல் இருந்திருந்தால்கூட படத்திற்கு எவ்வித தொய்வும் ஏற்பட்டிருக்காது. இடைச்செருகலாகத்தான் இப்போதும் தெரிகிறது. பட விழாக்களுக்கு அனுப்பும்போது இதனை நீக்கிவிட்டு அனுப்பினால் நல்லது.



ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தப் பாடல் காட்சி மிஷ்கினின் வழக்கமான வித்தியாசமான நடன அசைவுகளாலும், பாடல் வரிகளாலும் கவனப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு முழுமைக்கும் ஈசன் படத்தின் ஜில்லா விட்டு ஜில்லா வந்த பாடலுடன்,  இப்பாடலும் மியூஸிக் சேனல்களில் போட்டியிடும் என்றே கருதுகிறேன்.


சாரு நிவேதிதா என்கிற மனிதரை என்னைத் தவிர வேறு யாருக்கும் அன்றைக்கு தியேட்டரில் தெரியாததால் அவர் தோன்றுகின்ற அரை நொடி காட்சியில் யாரும் பரவசமடைந்து கை தட்டவில்லை. ஒருவேளை அவர்களது காதல் இப்போதும் நீடித்திருந்தால் சாரு கொஞ்சம் வினாடிகள் அதிகமாகத் தெரிந்திருப்பாரோ என்னவோ.. ஆனால் இதுபோல் குரூப் டான்ஸரைப் போல் வருவதற்குப் பதிலாக ஒரு வில்லன் கேரக்டரையே சாருவுக்குக் கொடுத்திருக்கலாம். பின்னியிருப்பார். இப்போதைய சிச்சுவேஷனுக்கும் ஏற்றாற்போல் இருந்திருக்கும். கூடவே, தமிழ்ச் சமூகத்தின் மாபெரும் எழுத்தாளரை வசனம் பேசி, நடிக்க வைத்த பெருமையும் மிஷ்கினுக்குக் கிடைத்திருக்கும். வடை போச்சு மிஷ்கினுக்கு.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. சேரன் பணியாற்றுவது சிபிசிஐடி பிரிவு என்று சொல்கிறார்கள். இந்தப் பிரிவில் பணியாற்றும், கான்ஸ்டபிள்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்கள், கண்காணிப்பாளர்கள் சீருடை அணிந்துதான் பணியாற்ற வேண்டும் என்பதில்லை. பெரும்பாலும் மப்டியில்தான் இருப்பார்கள்.

ஆனால் இவர்களுக்கான அதிகார அத்தாரிட்டி தனி டி.ஜி.பி. தலைமையில் இயங்குகிறது.. தனி ஹெட்குவார்ட்டர்ஸும் இருக்கிறது.. அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தனிப் பிரிவு அலுவலகங்கள் இருக்கின்றன. ஆனால் இவர்கள் அந்தந்த மாநகர காவல்துறை ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் வர மாட்டார்கள். சி.பி.சி.ஐ.டி.யின் மாநிலத் தலைமைக்கு மட்டுமே கட்டுப்படக் கூடியவர்கள்.



படத்தில் சிட்டி கமிஷனரின் உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், மூடப்பட்ட ஒரு வழக்கை நகர போலீஸ் கமிஷனரே சேரனிடம் விசாரிக்கச் சொல்வதுமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

லோக்கல் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்கள் வழக்கை சரிவர விசாரிக்கவில்லையெனில்தான் அதனை சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றுவார்கள். அதுவும் மாநகர ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களின் சிபாரிசின் பேரில் மாநில சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.தான் இதற்கு உத்தரவிடுவார்.

சி.பி.சி.ஐ.டி. பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் நேரடியாக யாருடனும் தொடர்பில் இருக்க முடியாது என்பதால் நேர்மையாக வழக்கை நடத்துவார்கள் என்பது அனுமானம். சமீபத்தில் சேலத்தில் முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டரின் குடும்பமே கொலை செய்யப்பட்ட வழக்கு இப்படித்தான் சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவர்களது விசாரணையின் கீழ்தான் சேலத்து தி.மு.க. புள்ளி பாரப்பட்டி சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.(லோக்கல் போலீஸ் இவரை விசாரிக்கக்கூட இல்லை.)  இந்தக் குழப்பத்தைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

அதேபோல் விசாரிக்கப் போகும்போது இதே மூன்று பேருடன்தான் போக வேண்டுமா..? கூடுதல் போலீஸாருடன்தான் போவார்கள். இதுபோல் போயிருந்தாலே படத்தில் பல முடிச்சுக்களை முன் பாதியிலேயே அவிழ்த்துவிட்டிருக்கலாம். ஆனால் சினிமாவுக்கு இறுதிக் காட்சிவரை கொண்டு போக வேண்டியிருந்ததால் அதையே மெயின்டெயின் செய்துவிட்டார் இயக்குநர். சரி.. பரவாயில்லை..

வெளியில் சத்தம்போடக்கூட தெரியாத ஒரு அப்பாவியின் குடும்பம் ஒரு கண கோபத்தில் எடுக்கின்ற முடிவு எந்த அளவுக்கு சமூகத்தைப் பாதிக்கிறது என்பதைத்தான் இந்தப் படம் உணர்த்துகிறது. சமூக விரோதிகளின் செயல்களைவிடவும், அடக்கி வைக்கப்பட்டவர்கள் திமிறி எழும்போது ஏற்படும் உணர்வுகள்தான் அதிக விளைவை ஏற்படுத்தும். இதைத்தான் இப்படமும் உணர்த்துகிறது. இப்படியும் ஒன்று நடந்தால் எப்படியிருக்கும் என்றும் சில கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது. நினைத்துப் பார்க்கத்தான் பயமாக இருக்கிறது.

இந்தியன் படம் வந்தபோது ஊருக்கு ஒரு இந்தியன் இது மாதிரியிருந்தால் என்ன என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குள்ளும் எழுந்ததே.. அது போன்ற பயம் கலந்த உணர்வை இது தெரியப்படுத்தியிருக்கிறது.


பணக்கார வர்க்கம், அதிகார வர்க்கம், அரசியல் வர்க்கம் மூன்றும் சேர்ந்து அப்பாவிகளை பலிகடா ஆக்கினால் அவர்களை எதிர்த்து யுத்தம் செய்துதான் ஜெயிக்க முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் மிஷ்கின். இறுதிக் காட்சியில் ஒய்.ஜி.எம்.மும், அவர் மனைவியும் செய்வது இதைத்தான். யுத்தத்தில் யார் ஜெயித்தார்கள்..? யார் தோற்றார்கள் என்பது விஷயமில்லை. ஒரு சாமான்யன் இவர்களை எதிர்த்து யுத்தம் செய்தான் என்பதுதான் வருங்காலத்திற்கு தரப்பட்டிருக்கும் செய்தி. அதைத்தான் இத்திரைப்படத்தில் பதிவு செய்திருக்கிறார் மிஷ்கின்.

எப்படி பார்த்தாலும் தமிழ்ச் சினிமா கொண்டாடப்பட வேண்டிய திரைப்படம் இது. சந்தேகமில்லை. குழந்தைகள் இல்லாமல் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது.. பாருங்கள்.. 
Read more »
 
-