பிச்சைப்பாத்திரமும், அதனுடன் உறங்கும் வீடில்லா மக்களும்

 
ஒரு சில மனிதர்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கலாம். ஓரளவு தெளிவான முகத்துடனும், சிடுசிடுக்கும் கண்களுடனும் சாலை ஓரங்களிலோ, இல்லை பொதுப் பூங்காக்களிலோ தனக்குத்தானே பேசிக்கொண்டு இருப்பார்கள்.

அவர்களின் தோற்றத்தால், பிச்சைக்காரர்களாக நம்மால் நம் குழந்தைகளுக்கு அறிவிக்கப்படும் இவர்கள், கோயில்களருகே இருக்கும் பிச்சைக்காரர்களில் ஒருவராக நிச்சயம் இருக்க மாட்டார்கள். நெரிசலான சாலையில் நடந்து கொண்டிருக்கும் இவர்கள் திடீரென யாருமில்லாத வெற்றிடத்தை பார்த்து திட்டுவார்கள், கத்துவார்கள். இவர்களைப் பார்ப்பவர்கள் ஒரு ஈனப்பார்வையை இவர்களின் மீது வீசிவிட்டு இடைவெளிவிட்டு கடந்து போய்விடுவார்கள். உடலில் காயமில்லாமல் இவர்களைப் பார்ப்பது கொஞ்சம் அரிது. இவர்களின் அத்துமீறிய செயல்களால் மக்களோ இல்லை காவல்துறை நண்பர்களோ (??‼) நிச்சயமாக யாராவது அடித்திருப்பார்கள்,

யார் இவர்கள்??, ஏன் இப்படி மாறினார்கள்?

மனநலம் பாதிக்கப்பட்ட வீடில்லா நாடோடிகள். இவர்களை அதிகமாக பஸ்நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் கூட பார்க்கலாம்.



இவர்களுக்கு என்ன தேவை.. யாரிடமும் காசு கேட்டு பிச்சையெடுக்க மாட்டார்கள், பிச்சை கேட்டு தொந்தரவு செய்யவும் மாட்டார்கள். நீங்களாக ஏதாவது தந்தால் நிச்சயம் வாங்கிக்கொள்வார்கள்.

இவர்களுக்கு உணவு இரண்டாம்பட்சம்தான், பணம் தேவையேயில்லை. இவர்களுக்கு வேண்டியது “தன்னை யாராவது கவனிக்க வேண்டும்” “மற்றவர் கண்களுக்கு தான் மாறுபட்டு தெரிய கூடாது” என்பதுதான்.

இதிலிருந்து சற்று வேறுபட்டு இன்னொரு வகை மனிதர்கள் இருக்கிறார்கள். அம்மனிதர்கள் பிச்சையெடுக்க மாட்டார்கள், எங்காவது நகர்ப்புற தியேட்டர்களின் வாசலிலோ, தொழிற்சாலைகளின் அருகிலேயோ, நடமாட்டம் அதிகமில்லாத புதுக்கட்டடிடங்களின் பக்கத்திலோ உறங்குவார்கள். இவர்கள் பெரும்பாலும் கடைநிலை ஊழியர்களாக இருப்பவர்கள். பகலில் தியேட்டர்களில் வண்டிகளுக்கு பாஸ் போடுபவராக, தொழிற்சாலையின் துப்புரவாளராக இருக்கலாம். இவர்களைப் போன்ற சிலரை எனக்கு நன்றாகத் தெரியும். ஏதேனும் ஒரு போதை வஸ்துக்கு இவர்கள் நிச்சயம் அடிமையாக இருப்பார்கள். அவர்கள் ஆடைகள் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் துவைபடக்கூடியவையாய் இருக்கும். எனக்குத் தெரிந்து சிலர் முன்னர் குறிப்பிட்ட நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

அச்சடித்த தாள்களில் எழுத்துருக்களை அழிக்கப் பயன்படுத்தும் வெள்ளைநிற டில்லர் ரசாயனத்தையும், பி.வி.சி குழாய்களில் நீர்க்கசிவை கட்டுப்படுத்தும் சொலுசன்களையும் பயன்படுத்தி போதையேற்படுத்திக் கொள்பவர்கள் பெரும்பாலும் இவ்வாறு வேலைசெய்பவர்கள்தான். (சில மாதங்களுக்கு முன்பு கோபிசெட்டிபாளையம் நகரில் ஒரு மைதானத்தின் நடுவே ஆதரவற்ற சிறுவன் ஒருவன் மரணத்தை தழுவியிருக்கிறான். காரணம் அளவுக்கு மீறி சொல்லுஷன் நுகர்ந்ததுதான்.)

வீடில்லாத நிலையும், ஆதரவற்ற ஏளன நிலையும், மக்களின் பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் மனதை பாதித்து இவர்களும் தனியே பேசி, தெருநாய்களை மிரட்ட ஆரம்பிக்கின்றனர். பின்னர் ஓர்நாள் இவர்களும் முன்கண்ட வகையில் சேர்ந்து விடுகின்றனர்.

அடுத்து நடைபாதைகளில் உறங்கும் பிச்சைக்காரர்கள். இவர்களில் பெக்கர் மாபியா கும்பல்களை தவிர்த்தும் நிறைய வீடில்லாதோர் இருக்கிறார்கள். தனித்து விடப்பட்ட பெரியோர்கள் முதலில் காவி உடையணிந்து கோயில் கோயிலாக சுற்றி கோயில் பிரசாதங்களை வாங்கி உயிர்வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் கோயில் முன் அமர்ந்து பிச்சையெடுக்கும் நிலைக்கு ஆளாகிவிடுகின்றனர்.

வழக்கமாக சாலை சிக்னல்களில் பிச்சையெடுக்கும் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இரவில் காணாமற்போய் விடுகின்றனர். சாலைமேடைகளிலும், நடைபாதைகளிலும் உறங்குவோர் அவர்களில் கொஞ்சம் பேர்தான்.

இதில் இன்னுமொரு பகீர் தகவல் Raise of Crime rate…

பிச்சைக்காரர்களில் ஒரு குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுபவர்களாக இருக்கின்றனர். ரோட்டோர தகவல் சின்னங்கள், பயன்படாமல் இருக்கும் மின்கம்பிகள், வீடுகளிலினருகே இருக்கும் தண்ணீர் குழாய்கள், இன்னும் ஆங்காங்கே கிடைக்கும் பல பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை திருடி பழைய பொருட்கள் எடைபோடும் சில வியாபாரிகளிடம் விற்று விடுகின்றனர்.

இதில் கூட ஒரு சில விஷயம் புலப்பட்டது. அவ்வியாபாரிகள் இவர்களிடம் வாங்கும் பொருட்களுக்கு முழு மதிப்பிற்கான பணத்தை தருவதில்லை. பாதியளவு கொடுத்தே இவர்களை சரிகட்டிவிடுகின்றனர். மேலும் இவர்கள் திருடுவதை வெளிப்படையாகவே ஊக்குவிக்கின்றனர்.

இவ்வகைப் பிச்சைக்காரர்கள் சக பிச்சைக்காரர்களிடம் வழிப்பறி மட்டுமல்ல, பாலியல் துன்புறுத்தல், கொலை மிரட்டல், போன்ற பல குற்றங்களில் ஈடுபடுகின்றனர், ஆனால் புகார் செய்யப்படுவதுமில்லை, தண்டிக்கப்படுவதுமில்லை முக்கியமாக கண்டுகொள்ளப்படுவதுமில்லை. அங்கு உடலால் வலியவன் வெல்கிறான்.

இவர்களில் புதிதாக ஒரு வகையினரை சென்ற வாரம் பார்க்க நேர்ந்தது. தாம் பெற்ற மக்கள்களால் கைவிடப்பட்ட பெரியோர் இருவர் தம்பதிகளாகவே புல்லாங்குழல் ஊதிப் பிச்சையெடுத்தது மட்டும் இன்னும் மனதைக் கசக்கிக் கொண்டிருக்கிறது.

நம் சமூகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? முழுவதுமாய் சுரண்டப்பட்டு பின் எச்சமாய் தூக்கியெறிந்த மிச்சங்களாக ஒரு சாரர் பிச்சைக்காரர்களுடன் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

2001 இந்திய மக்கள் தொகை கணக்கின்படி வீடில்லாத இந்திய நாடோடி மக்களின் மொத்த எண்ணிக்கை 7.8 கோடி என்பது நெஞ்சை சுடும் உண்மை… இந்த விஷயத்தை பொருத்த மட்டில், நம் இந்திய அரசின் சாதனைகள் இந்த வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகளில் தெரிய வரும்…

பெருமை கொள்ளும் இந்தியத் தலைநகரில் டெல்லி டெவலப்மெண்ட் அத்தாரிட்டி (Delhi Development Authority - DDA) கூறுவது புதுடெல்லியின் மொத்த மக்கள் தொதையில் ஒரு சதவீதம் மக்கள் உறைவிடமில்லாதோர்.

இதன் அர்த்தம் மாண்புமிகு இந்தியத் தலைநகரில் ஒன்னரை லட்சத்துக்கும் குறைவில்லாத மக்கள் கடுங்குளிரிலும், கோடைப்புழுக்கத்திலும் தெருவில் உறங்குகின்றனர் என்பதுதான். அப்புறம் முக்கியமாக இந்த புள்ளிவிவரத்தில் பிளாஸ்டிக் தட்டிகளினடியிலும், ஃபிளக்ஸ் பேனர்களை கட்டி வைத்து அதனடியிலும் உறங்குபவர்கள் வர மாட்டார்கள். ஏனென்றால் நாம் கணக்கெடுப்பது வசதியான வீடில்லாதோர்களைத்தான்.

ஒவ்வொரு முறை இவர்களைப் பார்க்கும் போதும், இவர்களைப் பற்றி நினைக்கும் போதும் தோன்றுவது இந்த இரு கேள்விகள்தான்.

Who is responsible for this? Who should take the responsibility for them?

இங்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த மக்களைப் பற்றிச் சொல்ல வேண்டும். மேற்சொன்ன எல்லாவற்றிற்கும் ஆட்பட்டு வாழ்ந்திருந்தாலும், ஒரே தலைமுறையில் தங்களை மாற்றிக் கொண்டார்கள். இறுதிவரை அவர்கள் போராடியது நிரந்தர முகவரி ஒன்றிற்காகத்தான். அதன்பின் அவர்களை உயர்த்தியது உழைப்பு மட்டும்தான், தற்போது கல்வியும் அவர்களை உயர்த்தி வருவது சந்தோஷப்பட வைக்கும் ஒன்று.

தெருவில் உறங்கும், உழைக்கும் மக்களுக்கு அல்லது உழைக்க ஆசைப்படும் மக்களுக்கு அவர்களுக்கென்று ஒரு அடையாளம் இல்லை முகவரி ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்களின் எதிர்காலம் சிறிதளவாவது மாறும் என்பது என் அரைகுறைக் கருத்து.

இந்த விசயத்தில் நம் அரசாங்க சாதனைகளைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியுமாதலால், இந்த விஷயத்தைப் பொருத்த மட்டில் களத்தில் இறங்கும் NGOக்களை கண்டறிந்து நம்மால் முடிந்த ஆதரவைத் தெரிவிப்போம்.

சிந்திப்போம்…

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-