விக்கிபீடியா எனும் ஓர் உலகம் - தமிழர்களுக்காக!

வணக்கம் நண்பர்களே! அமெரிக்கர்கள் பார்த்து வெகு நாட்களாகிவிட்ட நண்பர்களை சந்தித்தால், "Long time no see!" என்று சொல்லி வியப்பார்கள். எனக்கு இப்பொழுது அவ்வாறுதான் சொல்லத் தோன்றுகிறது. பதிவுலகில் காலடி எடுத்து வைத்து, மன்னிக்கவும், கைவிரல்களசைத்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகிவிட்டன. மாதங்கள் வருடங்களாய்த் தெரிகிறது எனக்கு! இதை உயர்வு நவிர்ச்சி அணியில் சேர்க்க வேண்டாம். எனக்கு மனதளவில் குருவாக இருக்கும் என் அன்பு எழுத்தாளர் சுஜாதா அவர்கள், "எழுத்து எனக்கு மிக மிகத் திருப்தி அளித்த ஒரு காரியம். " என்று மகிழ்ந்திருக்கிறார். எனக்கும் அப்படித்தான். 


எனக்கு என்னவோ தெரியவில்லை, எழுதவேண்டும் என்ற எண்ணம் என் மூலையில் எங்கோ ஒலித்துக்கொண்டே இருக்கிறது. என் தாயிடமிருந்து வந்த மரபும், சுஜாதா போன்றவர்களின் எழுத்துக்களும், "ஏன் வெகு நாட்களாக நீ எழுதவில்லை?" என்று வினவி அன்புத் தொல்லை கொடுக்கும் மற்ற வலைப்பதிவர்களின் மின்-மடல்களும் என்னை எழுதத் தூண்டுகின்றன. இதோ... நான் இன்று சொல்லவிருக்கும் மிக மிக முதன்மையான கட்டுரை கீழே.


கூகிளின் 'Blogger' குழுவினர் இந்தியர்களிடம் இருக்கும் எழுதும் திறமையை அவர்கள் அத்தளத்தை  இந்தியர்களுக்காக வடிவமைப்பதற்கு முன் அறிந்திருக்க மாட்டார்கள். இந்தியர்கள் அதிகளவில் வருகை தரும் வலைத்தளங்களில் பிளாகரும் ஒன்று. இதில், தமிழர்களின் பங்கு  குறிப்பிடத்தக்கது! ஆனால், தமிழ் விக்கிபீடியா என்னும் ஓர் உன்னதமான வலைத்தளத்தை மிகச்  சிலரே அறிந்திருக்கிறார்கள்.  விக்கிபீடியா என்றால் என்ன? திமிழுக்கும் அதற்கும் என்ன தொடர்பு? அதைப் பற்றி ஏன் இந்தக் கட்டுரை? விடைகள் காண மேலும் படிக்கவும்.

விக்கிபீடியா  சராசரி மக்களாலேயே எழுதப்படும் ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம்.  அதாவது, யார் வேண்டுமானாலும் அத்தளத்தில் தங்களுக்கு தெரிந்த ஒன்றை உலகிற்கு சொல்லிக்கொடுக்கலாம்! இட்டிலி, தோசை, எவர் சில்வர் தட்டு, தண்ணீர், விக்கல், இருமல், நாற்காலி, வீடு, அரண்மனை, இந்தியா, தமிழ் மொழி, தமிழ் திரையுலகம், எம்.ஜி.ஆர், கமல் ஹாசன், அண்டம், செயற்கைக்கோள், கொசுக்கள், கனவு, உளவியல் என எந்தத் துறையில் வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம். தாங்கள் எழுத நினைத்திருந்த ஒன்று முன்னரே எழுதப்பட்டிருந்தால் அந்தக் கட்டுரையை நீங்கள் மேலும் விரிவாக்கலாம்!

விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது நம் வலைப்பதிவில் எழுதுவது போல் அல்ல. வலைப்பதிவில் நாம் நம் எண்ணப்படி எழுதுகிறோம். நாம் சொல்வதுதான் வாசகர்கள் படிக்க வேண்டும் என்ற சுதந்திரம் நமக்கு இருக்கிறது. ஆனால், உலக மக்கள் அனைவரும் வந்து செல்லும் அந்தத் தளத்தில் 'உண்மை நிலையை' எதிர்பார்க்கிறார்கள். அதாவது, இட்டிலி வெள்ளையாகக் காட்சியளிக்கும் என்று நீங்கள் எழுதுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதை ஒரு சீனாக் காரர் எப்படி நம்புவார்? மக்களாலேயே எழுதப்படும் கட்டுரையல்லவா? அவர் நம்பும்படி நீங்கள் தகுந்த புகைப்படத்துடன் தெரிவிக்க வேண்டும் அத்துடன் மற்ற வலைத்தளத்தில் இட்டிலியைப் பற்றி எவரேனும் எழுதியிருந்தால் அதை நீங்கள் சுட்டிக் காட்ட வேண்டும். சுட்டிகள் (references)  அதிகப்படியாக இருக்கும் கட்டுரை 'நல்ல கட்டுரை' என விக்கிபீடியாவால் தீர்மானிக்கப் படுகிறது.

அதுமட்டுமல்ல, எந்த ஒரு கட்டுரையும் தான்தோன்றியாக இருக்கக்கூடாது. அதாவது, அந்த கட்டிரை எந்த ஒரு ஆதாரத்தையும் அடித்தளமாக வைக்கப்பட்டு எழுதாமல் ஒரு செய்தி நாளிதழ் போன்று இருந்தால் விக்கிபீடியாவால் நிராகரிக்கப்பட்டுவிடும். இதற்கு முக்கியக் காரணம், விக்கிபீடியா எந்த வகையிலும் தானே செய்தி வழங்குவதாக ஆகிவிடக்கூடாது என்பதற்க்காகத்தான்.

இதெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறாய் எனக்கேட்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். காரணம் இருக்கிறது. விக்கிபீடியா ஏறத்தாழ உலகின் அத்தனை மொழிகளிலும் வலம் வருகிறது. வழக்கொழிந்துவிட்ட இலத்தின், சமக்கிருதம் போன்ற மொழிகளும் அடக்கம்! உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து விக்கிபீடியாவிற்கு வருகை தரும் ஒருவர் அவர் பேசும் தாய்மொழியில் ஒரு கட்டுரை எழுதுகிறார். இவ்வாறு இன்ன இன்ன மொழிகளுக்கு இவ்வளவு இவ்வளவு கட்டுரைகள் என வளர்ந்து நிற்கிறது விக்கிபீடியா.

தற்போதைய நிலவரப்படி, ஆங்கிலம், செர்மானியம், பிரஞ்சு, இத்தாலியம், போலிச் (Polish), நெதர்லாந்து, போர்த்துகீசியம், ருசியம் (Russian), சபானிச் (Spanish) மற்றும் சீன மொழிகள் முதன்மை வகிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட இனத்தவர்கள், அவர்கள் பேசும் தாய்மொழி அதிக கட்டுரைகளைக் கொண்டு முதன்மை வகித்தால் அவர்களுக்கு பெருமை எனக் கருதப்படுகிறது. நம் தமிழ் மொழி 81-ஆவது இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் 5-ஆமிடம், திராவிட மொழிகள் அளவில்  2-ஆமிடம்.


சுலபம் கருதி இந்திய அளவை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். விகித அளவில் பார்த்தால், நம்மைவிட மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மணிப்புரி இனத்தவர்கள், இந்திய உருது மொழியினர், குஜராத்தியினர், மலையாளிகள், கன்னடத்தினர் அனைவரும் நம்மைவிட அதிக கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். இது தமிழுக்கு வந்த இழுக்கல்லவா? 8 கோடி தமிழர்கள் நாம். நம் தமிழ் இலக்கியங்கள், இயல், இசை, நாடகம், கவிதை, வரலாறு, மாமன்னர்கள், நம் கலாசாரம் போன்றவற்றை முறையாக எழுதினாலே கட்டுரைகளின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துவிடும்! ஆனால், உண்மையில் மிக சொற்ப அளவிலான தரம் குறைந்த கட்டுரைகளைச் சுமந்துகொண்டு நிற்கிறது தமிழ் விக்கிபீடியா!

 விக்கிபீடியாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் என்ன?
மிக மிக முக்கியமானக் காரணம் இருக்கிறது. விக்கிபீடியா உலகளவில் பிரபலமாகிவிட்ட ஒரு கலைக்களஞ்சியம். பள்ளி, கல்லூரிகளுக்கு கட்டுரை எழுதுதல், மேடைப் பேச்சில் பேச குறிப்பு எடுத்தல், ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு செல்ல அந்நாட்டின் தகவலைச் சேகரித்தல் போன்ற எந்த செயலுக்கும் மக்கள் விக்கிபீடியாவை நாடுகிறார்கள். அப்படி இருக்கையில், நம் தமிழ் மொழியைப் பற்றி தகவல் தேடுபவர்களுக்கு நாம் கை கொடுக்கவேண்டுமல்லவா? அதற்காகத்தான்.

தமிழ் மொழியை தமிழர்களைத் தவிர வேறு யார் அறிந்திருக்கப் போகிறார்கள்? எழுதப்படும் அத்தனைக் கட்டுரைகளும் தமிழர்களே எழுதி, தமிழர்களே படித்துக்கொள்வது வேடிக்கையாக இருக்குமல்லவா?
தமிழை தமிழர்கள் மட்டும் தான் அறிந்திருக்கிறார்கள் என்று நீங்கள் எங்கு கேட்டுத் தெரிந்துகொண்டீர்கள்? கவுண்டமணி ஒரு படத்தில் செந்திலுடன் ஜப்பான் நாட்டிற்கு செல்வார். அப்பொழுது ஒரு கடையில் ஜப்பான்காரியை நோக்கி (தமிழ் தெரியாதென எண்ணி) கடிந்துகொள்வார். அதற்கு அந்த ஜப்பானியப் பெண் , "தமிழ்ழ யாரையும் திட்டாதீங்க. இப்போ தமிழ் உலகம் பூராவும் பரவி இருக்கு." என்று பதிலளிப்பார்.  அது நகைச்சுவைக்காக எடுத்தக் காட்சியோ என்னவோ, ஆனால் அதுதான் உண்மை. ஜெர்மானியர்களும், ருசிய நாட்டினரும் மிகுந்த ஆர்வத்துடன் தமிழ் மொழிப்பாடத்தை கல்லூரியில் படிக்கிறார்கள் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா?  

கட்டுரை எழுதுவதால் எனக்கென்ன இலாபம்?
கட்டுரை எழுதுவதால் உங்களுடன் சேர்ந்து மற்ற தமிழர்களுக்கும் இலாபம் தான். நம் இனத்தை மற்றவர்கள் நன்கு அறிந்துகொள்வார்கள் அல்லவா?

தமிழ் விக்கிபீடியாவில் நீ கட்டுரைகள் எழுதி வருகிறாயா?
ஆம்! விக்கிபீடியாவில் இணைந்து சிறு காலங்களே ஆகியிருப்பதால், சொல்லிக்கொள்ளும்படி கட்டுரைகள் எதுவும் எழுதவில்லை. இன்னும் 6 மாதங்களில் 100 கட்டுரைகளாவது எழுத வேண்டும் என்று இருக்கிறேன். 

விக்கிபீடியாவில் தற்பொழுது எத்தனை கட்டுரைகள் இருக்கின்றன?
இந்த கட்டுரை எழுதப்பட்ட நேரத்தில், தமிழ் விக்கிபீடியா 25, 529 கட்டுரைகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. முதலாவதாக இருக்கும் ஆங்கில விக்கிபீடியாவின் மொத்தக் கட்டுரைகள் எவ்வளவு தெரியுமா? 34,51,259 கட்டுரைகள்!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-