குதிரை ஓடும் போது நான்கு கால்களும் அந்தரத்தில் நிற்பதுண்டா? : கூகுள் டூடிளில் இன்று

Mostion புகைப்படங்கள் & வீடியோ தொழில்நுட்பம் இவை இரண்டையும் உலகுக்கு அறிமுகப்படுத்திய  முன்னோடிகளில் ஒருவரான
இங்கிலாந்தின் புகழ்பெற்ற புகைப்பட காரர் Eadweard J Muybridge இன் 182 வது பிறந்ததினத்தை பெருமைப்படுத்தும் விதத்தில் கூகுள் இணையத்தளம் இன்றைய (ஏப்ரல் 09) டூடிள் சின்னத்தை வடிவமைத்துள்ளது.
19ம் நூற்றாண்டின் மிகப்பிரபலமான புகைப்பட தொகுப்புக்களில் ஒன்றான 'Race Horse' (ஓட்டப்பந்தய குதிரை) இன் உருவாக்குனர் தான் இந்த எட்வார்ட் முய்பிரிட்ஜ்.

கலிபோர்னிய வர்த்தகரும், விலங்கு பண்ணையாளருமான Leland Standford என்பவருக்கு, 'குதிரை ஓடும் போது நான்கு கால்களும் நிலத்தில் படாது அந்தரத்தில் நிற்பதுண்டா?' என ஒரு சந்தேகம். எட்வார்ட் முய்பிரிட்ஜை அணுகி இச்சந்தேகத்தை ஆதாரபூர்வமாக விளக்க  கூறினார்.

இதையடுத்து 24 கமெராக்களை கொண்டு ஓடும் குதிரையை படம்பிடித்தார் முய்பிரிட்ஜ். 1872 இலேயே அவர் மேற்கொண்ட இந்த முயற்சி மோஷன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் ஆரம்ப முன்னோடி யோசனையாக விளங்கின.  ஆம், குதிரை ஓடும் போது ஒரிரு  அசைவில் நான்கு கால்களும் அந்தரத்தில் நிற்பதுண்டு என இப்புகைப்படங்களை கொண்டு அவர் நிரூபித்தார்.   (2,3ம் படங்களில் அவதானிக்கலாம்)
இதன் பின்னர் இதே போன்று விலங்குகளின் அசைவுகளை இப்படி மோஷன் அசைவுகளாக அவர் படம்பிடிக்க தொடங்கினார்.1830 ம் ஆண்டு இங்கிலாந்தின் கிங்ஸ்டனில் பிறந்து வளர்ந்த முஜ்பிரிட்ஜ், 1830 களில் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தார். ஓர் வாகன விபத்தின் பின்னர் புகைப்படத்துறையில் தீவிர நாட்டம் செலுத்தினார்.

1860 களில்  இயற்கை மற்றும் கட்டிடக்கலைகளை படம்பிடித்த முஜ்பிரிட்ஜ், யோஸ்மைட்டில் உள்ள தேசிய பூங்காவை படம்பிடித்து வெளியிட்ட போது புகழடைய தொடங்கினார்.

இந்த குதிரை ஓட்ட அசைவுகளை படம்பிடித்த பின்னர்,  விலங்குகளின் அசைவுகள் குறித்து புகைப்படங்கள் மூலம் ஆராய்ச்சி செய்ய தொடங்கிய அவர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். தனது இறுதிக்காலத்தில் இங்கிலாந்துக்கு திரும்பியிருந்ததுடன், அவருடைய ஆய்வுகள், மற்றும் புகைப்படங்களை கொண்ட புத்தக தொகுப்புக்களையும் உருவாக்கி வெளியிட்டார். 1904 ம் ஆண்டு மாரடைப்பில் அவர் மரணமடைந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-