பிரபஞ்ச நியதிகள் – காதல்


உலகில் எல்லா உயிர்களையும், அறிவு பேதமின்றி வளைத்துப்போட்ட எல்லை காதல். ஆதாம் ஏவாளில் ஆரம்பித்து இன்று என்னை உங்களை இன்ன பிற இதயங்களை உயிர்பிக்க அல்லது உயிரறுக்க உற்ற தோழனாய் இருப்பது காதலே. சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சி, சாணக்கியர்களின் தோல்வி, கண்டங்களின் தோற்றம், துரியோதனனின் மரணம் முதல் தற்கொலைகள் கொலைகள் வரை காதல் வியாபித்துவிட்டது. தமிழனின் காதல் ஜாதிகளைத்தாண்டி வருகிறது ஜாதிகளால் பிரிக்கப்படுகிறது. வெள்ளையனின் காதல் காரணத்தால் வருகிறது காரணமின்றிப் பிரிகிறது. நியூட்டனின் மூன்றாம் விதி தோற்கும் இடமும் காதல்தான், நீ ஆழமாக ஆராதிக்கும் பெண் உன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் போகலாம், நீ கண்ணெடுத்தும் பாராத பெண், உன்னை கண்கண்ட தெய்வமாக மதிக்கலாம். ஐயா நியூட்டன் அவர்களே இப்போதுமா சொல்கிறீர்கள் “உலகில் எல்லா தாக்கங்களுக்கும் சமனானதும் எதிரானதும்………??
இந்தப் பதிவு சுயநலக் காதல்களையும், ‘நிச்சயிக்கப்பட்ட’ காதல்களையும் (அந்தஸ்து, ஜாதி, மதம் பார்த்து ‘மேற்கொள்ளப்படும்’ காதல்கள்) தவிர்த்துவிடுகிறது. எல்லாக் காதல்களும் ஜெயிக்காமல் போவதற்கு ஒரே காரணம் காதல் வரையறுக்கப்படாதது மட்டுமல்ல காதல் சூழ்நிலைக் கைதியும் கூட. கைமாறும் தாம்பூலத் தட்டுக்கள் எத்தனை இதயங்களின் கல்லறைக்கான அத்திவாரங்கள்? பெற்றோர்களின் தற்கொலை நாடகங்களில் எத்தனை காதல்கள் பாத்திரம் இழந்து போயின? எதோ உந்துதல் என்னை பதியத் தூண்டிவிட்டது அனால் சொல்லெனாத் துயரங்கள் எதை சொல்வது எதை விடுவது என்று சிந்திக்க வைக்கிறது.
இப்படி வரவேண்டும் காதல் அப்படித்தான் வரவேண்டும் காதல் என்று அறிவு ஜீவிகள் சொல்வார்கள் காதலுக்கு கண்ணே இல்லை இதில் மூளை எங்கனம்? சட்டென்று வருவாள், உடல் எடை குறைவது போல ஒரு சொர்ப்பணம், இதயம் லேசாகி உடலை விட்டு நீங்குவது போல ஒரு பிரமை, இவளின்றி எவ்வண்ணம் அமையப் போகிறது என் உலகு என்ற பயம், மூளையின் அதிகாரம் இன்றி இயங்கும் உடல் உறுப்புகள், அளவுக்கு அதிகமான சிரிப்பு, தேவையற்ற கோபம், தனிமையில் இனிமை, இளையரஜாவில் நாட்டம், அதிகரித்த கவித்துவம், ஆரவாரமான தத்துவங்கள், உனக்குள் உதிக்கும் புதுமைப் பித்தன், வழமைகளில் உள்ள பழமைகள் மேல் வெறுப்பு இவை காதல் வரும் போது தோன்றும் சில அறிகுறிகள். இது இல்லாமல் காதல் வந்த பலரும் இருக்கலாம் இவற்றுடன் சேர்த்து இன்னும் பல அறிகுறிகளுடனும் காதல் வரலாம்; நான் முன்னரே சொன்னது போல; காதல் வரையறை அற்றது.
காதலுக்கு இதயம் சின்னமென்பது சரிதான். விஞ்ஞானமே சொல்கிறது ஒருவர் 80 வயது வாழ்ந்தால் அவரின் இதயம் 40 வருடங்கள் ஓய்வெடுத்திருக்கிறது. இருப்பது போலும் இல்லாது போலும் இருப்பதில் காதலுக்கு நிகர் எவருமில்லை. இதயம் சரிதானே? எதோ ஒரு தருணத்தில் யாரோ யாராலோ காதலிக்கப்பட்டிருக்கிறார்கள், ஏற்கப்படாத இதயம் என்று இங்கு எதுவுமே இல்லை, ஆனால் ஏற்கப்பட்டும் பொருத்தமில்லாத சந்தர்ப்பங்கள் ஏராளம் இருந்திருக்கலாம்.
எனது பார்வையில் காதல் பின்வருவனவற்றை வெறுக்கிறது (இது ஆண்பால் சார்ந்ததெனினும்) நேசித்த நெஞ்சம் நேசிக்க மறுத்தபோதும் நேசித்தவளின் வீழ்ச்சி, அவள் கணவனின் மரணம், அவள் உறவுகளின் பிரிவு, நம்மால் அவள் மேல் ஏற்படும் தேவையற்ற அழுத்தம், அவள் சந்திக்கும் விபத்துக்கள், அவளின் கண்ணீர், அவளின் ஏமாற்றங்கள், அவளின், அவளின், அவளின்………….
நீங்கள் காதலித்திருந்தால் உங்கள் அவர்கள் உங்களை ஏற்க மறுத்திருந்தாலும் (இதுவும் ஆண்பால் சார்ந்ததெனினும்) நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் கீழுள்ள எதோ ஒன்றையேனும் நீங்கள் நேசித்திருப்பீர்களே? அவளின் குழந்தை, அவளுக்கு வாய்த்த ஆடம்பர வாழ்க்கை, அன்பான கணவன், அவளின் வெற்றிகள், அவளின், அவளின், அவளின் …………………….
இதை எழுதுவதற்கு எனக்கிருக்கும் அனுபவம், வயது என்பன பற்றி நிறைய கேள்விகள் எழலாம். என்னுள் பருவ மற்றம் ஏற்படத் தொடங்கிய 2001 தொடக்கம் இன்று இரவு 11.07 வரை நிறைய பார்த்துவிட்டேன், சொந்த அனுபவங்கள் இருக்கின்றன; அளவில் குறைவு, நண்பர்களின் உறவுகளின் ஆயிரம் ஆயிரம் கதைகள், நாம் தமிழராய் இருப்பதால் அளவுக்கதிகமாக வேரறுக்கப்பட்ட கதைகள் சில வேரூன்றிய கதைகள்; வேரூன்றியும் நீரற்று மடிந்த கதைகள், விருட்சமாகியும் வெட்டிச் சாய்க்கப்பட்ட கதைகள், யாதார்த்தம் தந்த பிரிவுகள், சொல்லிய காதல்கள், சொல்ல மறந்த காதல்கள் இன்னும் பல இந்த வரையறைக்கு அப்பாற்பட்ட காதல்கள் எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது. சோகம் என்னவெனில் இணைந்த கரங்கள் ஏதும் இமயம் போல் எழுந்த கதைகள் கேட்டிருக்கிறேன்; பார்க்கவில்லை.
காதலின் எதிரிகளை சீர்திருத்தும் நோக்குடனும் இது பதியப்படவில்லை, காதலுக்கு வரைபடம் வரையவும் நான் தயாராக இல்லை. வாழ்கையின் பாதையில் காதலித்துப் பாருங்கள்; தோற்றால்? நிச்சமாய் எனக்குத் தெரியும் அது உங்களின் பிழை மட்டுமல்ல என்று! ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளிய சிவபுராண வரிகள் சில காதலுக்கும் பொருந்தும் போலும்,
“கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று”

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-