அழகு ஆறு

"னக்கு அழகாய் தெரிகிற ஆறை அதிகம் அலட்டாமல் எழுது" என்று அன்பாய் சொன்ன துர்காவுக்கு நன்றி. முதலிலும் விசர்குணம்(வித்தியாசமான) பத்தி எழுதச்சொல்லி வேண்டுதல் விடுத்த துர்க்கா ,சினேகிதிக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மற்றவர்களின் பதிவை படிப்பதற்கே நான் அதிக நேரம் ஒதுக்குவதால் எனக்கு கிடைக்கும் குறுகிய நேரத்தில் விசர்குணம் பற்றிய பதிவு எழுத முடியாமல் காலம் போய்விட்டது.(அப்படியில்லை மானத்தை காப்பாற்றிக் கொண்டேன். :-)) ) சரி இந்த அழகான பதிவை எழுதலாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.

எனக்கு பிடித்தில் எல்லாம் ஒரு அழகு இருக்கிறது என்பது என் அபிப்பிராயம். அப்படி எனக்கு பிடித்த தருணங்கள் வெறும் ஆறுதானா? இதோ:

1. அன்பாய் அந்திப்பொழுதில் பூங்காவில் கெந்தல் நடை புரியும் இளம்/கிழம் ஜோடிகள்.

அப்பப்போ நேரம் கிடைக்கும்போது அருகில் உள்ள பூங்காவுக்குள் என் கண்களுடனும் என் மூன்றாவது கண் கமராவுடனும் நுழைவது வழக்கம். அங்கே இருக்கும் அழகான பூக்கள் முதல் புழுவரை என் மூன்று கண்களுக்குள்ளும் பதிந்து வைப்பது உண்டு. அப்போது அங்கே நடை பயிலும் இளம்,கிழம் ஜோடிகளும் அவர்கள் அன்பும் கண்டு வியந்ததும் உண்டு, நொந்ததுமுண்டு. { நாம் எல்லாம் எப்ப இப்படி? :-)) }


2 மாலைப்பொழுதில் ஜெர்மன் நீண்டவழி பாதையுடாக என் துவிச்சக்கர வண்டியில் நன்பர்களுடன் போட்டிபோடும் போதும், அரட்டை அடிக்கும் போதும்.


ஓவ்வொரு சனி பின்பகல் முதல் எந்த காரியமும் எனக்கு ஓடாது. நன்பர்களுடன் நாளை அடிக்க இருக்கும் அரட்டை பற்றிய சிந்தனையே. ஞாயிறு அவர்களுடன் செல்லும் அந்த அடர்ந்த(?) காட்டு நெடுவழி முதல் என் ஓட்டை துவிச்சக்கரவண்டிமுதல் அழகாய்தான் தெரியும். {சில நன்பர்களுடைய முகங்கள் என் முன் வந்து பயம் காட்டுவதை நான் இங்கே கணக்கெடுக்கவில்லை :-)) } நாங்கள் அடிக்கும் அரட்டை அப்படி! ( எப்படி? )


3. அருமையான திரைக்கதையும் அதை சிறந்த முறையில் படம்பிடிக்கக்கூடிய தொழில் நுட்பமும் கூடிவரும் திரை காவியங்கள் பார்கையிலே


நான் ஒரு சிறந்த ரசிகன்.{அப்படி நினைக்கிறேன்} அதனால்தான் அழகை ரசிக்கிறேன். அதேபோல் அழகான கதை , நடிப்பு , இசை கொண்ட திரைக்காவியங்களும் எனக்கு திகட்டுவதில்லை. தமிழ்,ஆங்கில சினிமா முதல் ஈரானிய திரைப்படங்கள் என என் ரசனை உலக அழவில் விரிந்திருக்கும். ஒரு நடிகன் முதலில் சிறந்த நடிகனாகவே ஜெயிக்க வேண்டுமே தவிர அவன் சொந்த வாழ்கையில் நல்லவனா? கெட்டவனா? அது தேவையில்லாத விடயம். அவன் ஒரு நடிகன் என்று பெயர் பெற முதலில் நடிக்க தெரிந்திருக்கவேண்டும். அதன் அடிப்படையில் நன்றாக நடிக்க தெரிந்த நடிகர்கள் எல்லோருடைய விசிறி நான்.


4.இசையே என் காதலி


இசையின் இனிமை யாருக்குத்தான் கசக்கும் .திரைப்படங்கள் போலவே பல்வேறு தரப்பட்ட இசையை ரசிக்க பிடிக்கும். தமிழ் இசைமட்டுமல்ல ஆங்கில இசைகள் கூட என்னை கவர்தன என்றால் அதுவும் எனக்கு அழகாகத்தான் தெரிந்தன. எனது தெரிவுப் பாடல் குறுவட்டை கேட்பவர்கள் தங்கள் தலையை பித்துகொள்வது திண்ணம். அவர்களுக்கு திண்டாட்டம். கட்டாயம் நான் தூங்கம்போது செவ்விந்தியன்களில் விதவிதமான
புல்லாங்குழல் ஓசை கேட்க வேண்டும். (இதுவும் என் விசர்குணம்தான்) அது இல்லாவிடில் வேறு மென்மையான இசை. இப்படியான தருணங்களில் நம்ம இளையராஜா எனக்கு உதவுவார். காலை முதல் மாலை வரை இசையுடன் கழிப்பதால் அதுவும் அழகாகவே எனக்கு தென்படுகிறது.

5.தமிழ்


நான் கண்டு வியந்த , அழகை உணர்ந்தவற்றுள் தமிழுக்கே முதலிடம். எத்தனை அழகு. நான் ஓர் தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் என்னை பெருமைப்பட வைத்ததில் முதலிடம் எனது மொழியே. இலக்கணம் , இலக்கியம் , முத்தமிழ் , தமிழ் வார்த்தை பிரையோகம், எதுகை மோனை , அடுக்குமொழி ,அடைமொழி ம்... சொல்லிக்கொண்டே போகலாம். அனைத்துக்கும் அடிமை நான். நான் அறிந்த ஏனைய சில மொழிகளில் சொல் கொஞ்சமும் பாவனை அதிகமாகவும் இருப்பது கண்டிருக்கிறேன். ஆனால் தமிழ் நான் கண்டு வியந்த மொழி. எனக்கு தமிழ் அறிவு கொஞ்சம் குறைவுதான் என்றாலும் மற்றவர் கவி,கட்டுரை,விமர்சனம் பார்த்து கற்றதும் ரசித்ததும் ஏராளம்.


6.எங்கள் குடும்பம்


பரபரப்பான மேலைத்தேய வாழ்க்கையில் கூட குறிப்பிட்ட ஒரு தினம் ஒதுக்கி கலந்துரையாடுவதும் , குதித்து விளையாடுவதும் எம் வீட்டின் மாற்ற முடியாத வழக்கம். எந்த ஒரு துன்பமும் எங்களை அடைய விடாமல் பாதுகாத்து கொள்ளும் எம் பெற்றோர்களையும் , அவர்களை மனதளவில் நோகடிக்காத எம்மையும் எமக்கே பிடித்திருக்கிறது. கஸ்டப்பட்ட காலத்திலும் கடிக்க எமக்கு கடிஜோக் இருந்திருக்கிறது.கஸ்டத்தை மறந்திருக்கிறோம். எமக்கு கடவுள் தந்த கொடை இது. எனக்கும்தான்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-