மரணதண்டனை எதிர்ப்போம்,மனித நேயம் காப்போம்.

 
மன்னிப்பிலும் வலிய தண்டனை வேறேதும் இல்லை என்பது என் ஆணித்தரமான கருத்து.ஒருவன் தன் குற்றவாளியை முழுமனதாய் மன்னிக்கும் போதே அக்குற்றவாளி ஆனவனுக்கு தன் குற்றத்தை உணர்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.மாற்றாக அவனைத் தண்டிக்கும் போது,குற்றவாளி முதலில் குற்றம் செய்கின்றான்,தண்டிப்பவன் இரண்டாவதாய்க் குற்றம் செய்கின்றான்.மொத்தத்தில் இருவருமே நீயாயவாதிகள் இல்லை.

தங்களை நீதிமான்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு,மற்றவர்களைத் தண்டிக்க முண்டியடித்துக் கொண்டிருப்பவர்களின் அக்கிரமங்கள்,இன்னும் வெளியுலகத்திற்குத் தெரியவில்லை.அவ்வளவுதான்.இவ்வுலகத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளுக்குள் இருப்பவர்களை விடக் கொடூரமான குற்றவாளிகள் அதிகாரம் என்ற போர்வையையும்,பண பலம் என்ற முகமூடியையும் அணிந்து கொண்டு வெளியில் இருந்து நியாயம் விசாரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.அது தான் இந்த உலகத்தில் நீதி.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரண்டு வகை.ஒன்று தூண்டுதலின் பேரிலோ,நேரிடையாகவோ குற்றம் செய்தவன்,மற்றையது அவனது காலக் கொடுமையில் அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டவன்.இவர்கள் இருவரையும் வேறு பிரிப்பது என்பது அசாத்தியமானது.ஏனெனில் தீர்ப்பு வழங்கப்படுவது முன் வைக்கப்படும் சாட்சியங்களிலும்,வக்கீலின் வாதத்திலுமே.இதைத்தான் அண்ணா அழகாகச் சொன்னார்,சட்டம் ஒரு இருட்டறை,அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்குஎன்று.ஆனால் இங்கு பெரும்பாலும் பணத்திற்காக வாதாடுபவர்களே வக்கீல்கள்.சாட்சியங்கள் என்பது அதிகாரத்தில் உள்ளவர்களின் கைவினைப் பொருள்.மொத்தத்தில் நீதி என்பது போலியாய் காற்றில் ஆடிக் கொண்டிருக்கும் தராசுதான்.

இன்று தமிழ் நெஞ்சங்களில் புயலாய் வீசிக்கொண்டிருக்கும் சம்பவம்,முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோரின் தூக்குவிவகாரம்.21 ஆண்டுகளாக கேள்விக்குறியுடன் இருக்கும் மர்மத்துக்கு இவர்களின் தூக்கின் மூலம் விடைகாண முயல்கின்றார்கள். 21 ஆண்டுகள் வெளியுலகத் தொடர்பின்றி, தங்கள் இளமையைத் தொலைத்து, மனதளவில் இறந்தவர்களின் உயிரைப் பறிப்பதன் மூலம் இவர்கள் அடைந்துவிடப்போகும் வெற்றிதான் என்ன??
உண்மையில் குற்றம் செய்தவன் என்றால்,தன் பாவத்தின் சம்பளமாக மரணத்தை எண்ணி மகிழ்வாய் இந்தப் பூமியில் இருந்து விடைபெறுவான்,ஏனெனில் மனிதனின் தண்டனையைப் பார்க்கிலும் அவனின் மனச் சாட்சியின் தண்டனை மகாகொடியது.ஆனால் அநியாயதிற்கு பழி சுமத்தப் பட்டவனோ தன் நியாயத்தை வெளிப்படுத்த முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் அல்லவா விடைபெறப்போகிறான்.
ஒருவன் குற்றவாளியோ அல்லது நிரபராதியோ,ஆனால் அவனுக்கு வழங்கப் படும் மரணதண்டனையானது,அவனுக்கு வழங்கப் பட்ட தண்டனையல்ல.ஏனெனில் அவன்தான் அதை அனுபவிப்பதற்கு இவ்வுலகில் இல்லையே.மொத்தத்தில் அந்தத் தண்டனையை அனுபவிக்கப் போவது அவனை நேசித்த உறவுகளே.

மரணதண்டனை எதிர்ப்போம்,மனித நேயம் காப்போம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-