காவலன் பாடல்கள் - ஒரு கண்ணோட்டம்

 

1) விண்ணைக்காப்பான் – திப்பு & ஸ்வேதா (பாடல் – பா.விஜய்)

கொஞ்சம் ஒதுங்குங்கண்ணா என்று கபிலனிடம் சொல்லிவிட்டு பா.விஜயிடம் ஒப்படைத்திருக்கிறார் ஓப்பனிங் பாடலை. நீண்ட நாட்களுக்கு பிறகு திப்பு. ஆரம்ப இசை வித்தியாசம் என்றாலும் ட்ரம்ப்பெட், என அதே கருவிகள். உற்சாகம் மேலிடுகிறது. இந்த முறை விஜயின் புகழ் பாடாமல் இறைவனை போற்றி தொடங்குகிறது
 விண்ணைக் காப்பான் ஒருவன்.. மண்ணைக் காப்பான் ஒருவன்
உன்னை என்னை காக்கும் அவனே அவனே இறைவன்
வெறும் குத்துப்பாட்டென ஒதுக்கிவிட முடியாத பீட். வித்யாசாகரின் குத்துப்பாடல்களில் என்னைக் கவர்ந்த அம்சம் எங்கேயும் டெம்ப்போ குறையாமல் போவதுதான். கில்லியின் தொடக்கப் பாடல் ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மை ஆட வைத்துக் கொண்டேயிருக்கும். இதிலும் அப்படித்தான். ஒரு நொடி கூட நிற்காமல் ஓடுகிறது. என்னதான் இறைவனை புகழ்ந்து தொடங்கினாலும் விஜய் ரசிகர்களை குளிர்விக்க ஏதாவது சேர்க்காமல் இருப்பாரா பா.விஜய்?
ஆலால கண்டனே..ஆட்டத்துக்கு மன்னனே..ஆனந்த தாண்டவம் ஆடுவோமே
விஜயே பாடும்படி எழுதியவரிகள். கண்ணனைப் பார்த்து பாடுவது போல் வருகிறது. ஆனால் யாரை குறிக்கிறது என சொல்லவும் வேண்டுமா????????? அடுத்த பாடலுக்கு போகாமல் இங்கேயே சிக்கி தவிக்கிறது என் மனமெனும் சிடி.

2) யாரது.. யாரது – கார்த்திக் &சுசித்ரா ( யுகபாரதி)
வித்யாசாகரின் மெலடிகளுக்கு சில பிரத்யேக முகவரிகள் உண்டு. கேட்கும் முதல் நொடியிலே இதை அப்படியொரு பாடலென வகைப்படுத்தி விட முடிகிறது. இது தனுஷ் பாடல் என்றும் சொல்லலாம். கேட்ட உடனே பிடிக்க வில்லையென்றாலும் கேட்க கேட்க பிடித்து போகிறது. பித்து பிடிக்க வைக்கிறது. சுசித்ராவின் பெயர் இருந்தும் பாடவில்லையென என நினைக்காமல் பார்த்துக் கொள்கிறார் கார்த்திக். வெறும் ஹலோ, ஹம்மிங் மட்டும் சுசித்ராவுக்கு. சித்திக் இதை பார்ப்பதற்கும் இதமான ஒரு பாடலாக படமாக்கியிருப்பார் என நம்புகிறேன்
உச்சந்தலையில் அவள் வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய திமிரில் இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
யுகபாரதி கொஞ்ச காலம் அறிவுமதியின் வீட்டில் தங்கியிருந்தாராம். இப்பவாது நம்பறீங்களா?

3) ஸ்டெப் ஸ்டெப் – பென்னி தயாள் & மேகா (விவேகா)
சில நாட்களாகவே என் காலர் ட்யூன் இந்தப் பாடல் தான். ஆனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மட்டுமே கேட்க முடிகிறது. இருந்த 4 பாடல்களில் அலைபேசி தரத்தில் கேட்ட போதே பச்சக்கென ஒட்டிக் கொண்ட பாடல். பாடியது எனது ஃபேவரிட் பென்னி தயாள். ஆரம்ப இசையை கேட்டவர்கள் யாரும் விஜய் பாடலென்றோ, வித்யாசாகர் பாடலென்றோ சொல்ல மாட்டார்கள். பேஸ், எலக்ட்ரிக் கிட்டார் எல்லாம் பொதுவாக விஜய் ஆண்டனி வசமோ, ஹாரீசின் வசமோதான் இருக்கும். கொஞ்சம் தாங்கப்பா என்று கேட்டு வாங்கியிருக்கிறார் வித்யாசாகர்.
பார்க்கதான் சிறுபுள்ள..கலக்குற பயபுள்ள..
இளம்பெண்கள் நினைப்பால நீதான் மாப்பிள்ளை
ஏமாந்த ஆளில்லை..நான் உன்னை போலில்லை.
என்ஆட்டம் பாரேண்டி யாரும் இணையில்லை
லைட்டாக தளபதி புராணம் பாடினாலும் மற்ற வரிகள் பாடலின் மெட்டுக்கும், மூடுக்கும் நச்சென பொருந்துகிறது. விவேகா கந்தசாமி டைப் பாடலிலிருந்து ஸ்டியரிங்கை இப்படி திருப்பியதற்கு கோடி நன்றிகள். இப்போதைக்கு இதுதான் என் பிக் ஆஃப் த ஆல்பம்.

4) சடசட சடசட – கார்த்திக் (பாடல்- யுகபாரதி)
இந்த மாதிரி பாடலையெல்லாம் கார்த்திக்கிடம் கொடுத்து விட்டால் பாதி வேலை முடிந்தது இசையமைப்பாளருக்கு. கடன் வாங்கிய கிட்டாரை சொன்னதை விட அதிகமாகவே பயன்படுத்திவிட்டார். பல்லவி முடிந்த பின் வரும் கிட்டார் பிட்டை கேட்டுப்பாருங்கள். இப்படியெல்லாம் நம்மால் வாசிக்க முடிந்தால் எத்தனை பேரை ஆச்சரியப்படுத்தலாம்?
கங்கைநதி வெள்ளம் சிறுசங்குக்குள்ளே சிக்கிக்கொண்டு அக்கரைக்கு செல்ல எண்ணுதே
சின்னஞ்சிறுபிள்ளை ஒரு சொப்பனத்தை வைத்துக்கொண்டு கண்ணுறக்கம் கேட்டுநிக்குதே
யுகந்தோறும் பாரதியென வாழட்டும் யுகபாரதி. ஒவ்வொரு பாடலின் முடிவிலும் ஏனோ குஷி, ப்ரியமுடன் கால விஜய் படங்கள் நினைவில் ஊசலாடி செல்கின்றன.

5) பட்டாம்பூச்சி – கே.கே. & ரீட்டா (கபிலன்)
சுமாரான வேகத்தில் ஒரு டூயட். ஹாயாக அமர்ந்து காலால் தாளம் போட்டுக் கொண்டு விஜயின் நக்கலையும், அசினின் சிணுங்கலையும் ரசித்து மகிழலாம். அதற்கு தோதாக செல்லமாய் சிணுங்கி பாடுகிறார் கே.கே. அப்படி போடு என நயாக்ராவாய் கொட்டிய குரலை அடக்கி ஆள்கிறார் வித்யாசாகர். கபிலனுக்கு பிரமோஷனா என்பது தெரியவில்லை.
அலைவரிசையில் நீ சிரிக்க.. தொலை தொடர்பினில் நான் இருக்க..
உதடும் உதடும் பேசும்பொழுது உலகை மறந்தேனே
என்ன வேலை சொன்னாலும் அதை செவ்வனே செய்வேண்ணா என்கிறார். நோ நோ இது அரசியல் இல்லை. காதல் மட்டுமே :))
விஜய் ரசிகர்களின் தேர்வு : விண்ணைக் காப்பான்
எஃப்.எம்களின் தேர்வு : பட்டாம்பூச்சி
மெலடி ரசிகர்களின் தேர்வு : யாரது யாரது
நடன ரசிகர்களின் தேர்வு :ஸ்டெப் ஸ்டெப்
விஜய் படத்தின் பாடல்கள் முழுமையாக எல்லோரையும் திருப்தி செய்து பல நாட்கள் ஆகிறது. காவலன் அக்குறையை தீர்க்க வந்தது என்பதில் சந்தேகமேயில்லை. 17 அல்லது 24 ஆம் தேதி படம் வெளிவருவது உறுதி என்று சொல்லியிருக்கிறார்கள் காத்திருக்கிறோம்ண்ணா. உங்களுக்காக பாடலின் சில பகுதிகள் தொகுத்து தந்திருக்கிறேன்.கேட்டுவிட்டு சொல்லுங்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
-