பிரசவ தினம்


பிரசவத்திற்கான நாள் நெருங்கிவிட்ட தன் மனைவிக்கு அருகில் துணையாக இருக்க விரும்பும் பீட்டர் [Robert Downey Jr], எதிர்பாராத சில நிகழ்வுகளால் விமானத்தில் பயணிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு அட்லாண்டாவில் முடக்கப்படுகிறான். இந்நிலையில் லாஸ் ஏஞ்சலீஸ் நோக்கி காரில் பயணத்தை ஆரம்பிக்கும் ஏதன் [Zach Galifianakis], தன்னுடன் கூடவே பயணம் செய்யுமாறு பீட்டரிற்கு அழைப்பு விடுக்கிறான்….

சுயமைதுனம் செய்யும் நாயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?! இயக்குனர் Todd Phillips ஐத் தவிர வேறு எவராலும் கார் ஒன்றினுள் சுயமைதுனம் செய்யும் ஒரு நாயை இவ்வளவு அப்பாவித்தனத்தோடும், நகைச்சுவையோடும் திரைப்படுத்த இயலுமா என்பது சந்தேகமே. அவர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் Due Date திரைப்படமானது நம்ப முடியாத சூழ்நிலைகளினுள் ஒருமித்து மாட்டிக் கொள்ளும் இரு அந்நியர்களின் அசாத்தியமான பயணத்தை நகைச்சுவையுடன் திரைக்கு எடுத்து வந்திருக்கிறது.

பீட்டரும், ஏதனும் முதன் முதாலக சந்தித்துக் கொள்ளும் தருணமே அபசகுனமான ஒன்றாக அமைந்து விடுகிறது. அந்தக் கணம் முதலே ஏதனை தன் முழு மனதுடனும் வெறுக்க ஆரம்பித்து விடுகிறான் பீட்டர். ஆனால் தொடரும் சம்பவங்கள் பீட்டரை ஏதனுடனும் அவன் நாயான Sonny யுடனும் ஒரே காரில் பயணிக்கும் நிர்பந்தத்திற்குள்ளாக்குகிறது.

மிக இலகுவாக கோபத்தை எட்டி விடும் இயல்புடைய பீட்டர், ஒரு சில நாட்களில் தந்தை எனும் ஸ்தானத்தை அடையப் போபவன். முதிர்ச்சியடையாத குழந்தை ஒன்றின் குணத்தையும், அறிவையும் கொண்ட ஏதன், தன் தந்தையை பறிகொடுத்துவிட்டு, ஒரு காப்பி டப்பாவினுள் அவருடைய சாம்பலுடன் பயணிப்பவன். இவர்கள் இருவரும் மேற்கொள்ளும் பயணத்தில் பீட்டர் ஏறக்குறைய ஏதனிற்கு ஒரு தற்காலிக தந்தையாகி விடுகிறான். கட்டுப்படுத்தவியாலாத பையன் ஒருவனை தன்னுடன் கொண்டு பயணிக்கும் தந்தை படக்கூடிய அவஸ்தைகளிற்கு மேலாக வேதனைகளை பீட்டர், ஏதன் வழியாக அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இதன் வழியாக தன் கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளும் பீட்டர், பொறுப்பான ஒரு தந்தையின் நிலைக்கு தன்னை சீராக்கி கொள்கிறான். இதேவேளையில் தன் தந்தையின் பிரிவின் பின் யாருமே தனக்கில்லை என எண்ணி மனதினுள் உடையும் ஏதன், படிப்படியாக பீட்டரின் மனதில் ஒரு சிறிய இடத்தை தேடிக் கொள்கிறான்.

ஏதன் செய்யும் ஒவ்வொரு தகிடுதத்தமும் பீட்டரை கொலைவெறி கொள்ளத் தூண்டுகிறது. ஏதன், பீட்டரை இட்டுச் செல்லும் அசாத்திய சந்தர்ப்பங்களும், அவற்றினுள் மாட்டிக் கொண்டு பீட்டர் படும் அவஸ்தைகளும், இந்த தருணங்களை கஞ்சா உறிஞ்சும் இலகுடன் ஏதன் கடந்துவரும் பாணியும் இந்த இரு நடிகர்களினதும் நடிப்புத்திறனை திரையில் அருமையாக சிறைப்படுத்தி அசரவைக்கும் நகைச்சுவையாக மிளிரச் செய்துவிடுகிறது.

கஞ்சா விற்கும் வீட்டு சிறுவனைக் குத்துவதாகட்டும், ஏதனின் நாயின் முகத்தில் காறி உமிழ்வதாகட்டும், கொலைவெறி கொண்டு ஏதனை தாக்குவதாகட்டும், அதே ஏதன் மேல் நெகிழ்வாகி அவனை அணைப்பதாகட்டும் பரவசப்படுத்தியிருக்கிறார் நடிகர் ராபர்ட் டவ்னி ஜீனியர். அவரின் நகைச்சுவை நடிப்பும் அட்டகாசம்தான். ஏதனை நடிக்க சொல்லி பரிசோதிப்பதும், தன் மனைவிமீது சந்தேகம் கொள்ள ஆரம்பிப்பதும், வெஸ்டர்ன் யூனியன் ஊழியரிடம் மரண அடி வாங்குவதும் என [நான் என் பிள்ளை பிறந்தபோது எங்கிருந்தேன் தெரியுமா என வெஸ்டர்ன் யூனியன் ஊழியர் வினவ, மக்சில்லிஸிலா என டவுனி அடிக்கும் அந்த ஒரு சொல் டைமிங் டயலாக் அதகளம்] ஒரு சூப்பர் ஹீரோ நாயகன் எனும் நிலையிலிருந்து மிகவும் கீழிறங்கி வந்தது மட்டுமலாது, வழமையான தன் ஸ்டைலிலிருந்து அடக்கி வாசித்து தன் ரசிகர்களை வியக்க வைக்கிறார் டவுனி.

ஆனால் ஏதன் வேடமேற்றிருக்கும் நடிகரான ஸாக் கலிபையானாகிஸ், டவுனியையும் மிஞ்சி விடுகிறார் என்பதே உண்மை. இவ்வளவு இயல்பாக அவரால் எப்படி தகிடுதித்தங்களை திரையில் ஆற்ற முடிகிறது என்பது வியப்பான ஒன்று. அது அவரின் கூடப்பிறந்த இயல்பா என்று சந்தேகம் கொள்ள வைக்கும் திறன் அவரது. விமான நிலையத்தில் அவர் ரசிகர்களிற்கு அறிமுகமாகும் தருணம் முதல் கொண்டே அவரின் உடல்மொழியும், நடிப்பும் சிரிப்பு அலைகளிற்கு வலை போடுகிறது.

நடிகராக ஆகவிரும்பும் ஏதன், மார்லன் பிராண்டோ போல் காட்ஃபாதர் காட்சி ஒன்றை நடித்துக் காட்டுவதாகட்டும் [ அவர் அதை நடித்துக் காட்டி முடித்ததும் இந்த வசனங்கள் எல்லாம் நீயே எழுதியதா என சீரியஸாக ஒருவர் கேட்பார் பாருங்கள் ], பீட்டர் அருகில் தூங்குவதை சட்டை செய்யாது சுயமைதுனம் செய்வதாகட்டும், காமாண்டோ போல் மெக்ஸிகோவில் பீட்டரை மீட்பதாகட்டும் வழங்கப்பட்ட காட்சிகளில் எல்லாம் மரண அடி அடித்திருக்கிறார் அவர். அதே வேளை தன் தந்தையின் பிரிவால் வாடும்போதும், பீட்டர் தன்னை விட்டு பிரியப் போகிறான் என்பதை அறியும்போதும் நெகிழவும் வைக்கிறார். பீட்டர் காரில் தனியாக ஓட்டம் எடுத்தபின், ஒய்வெடுக்கும் இடத்தில் சூட்கேஸ் மீது அவர் அப்பாவியாக அமர்ந்திருக்கும் அந்தக் காட்சி மனதை பிசையும்.

திரைக்கதையை சலிப்பின்றி இவ்வளவு நகைச்சுவையுடன் எடுத்து வந்த இயக்குனர் டாட் பிலிப்ஸ், சந்தேகமின்றி திறமையான நகைச்சுவை திரைப்பட இயக்குனர்களில் ஒருவராக தன்னை மீண்டும் முன்னிறுத்தியிருக்கிறார். அவரின் சிறப்பான இயக்கத்தில் நகைச்சுவையும், மென்மையான உணர்வுகளும் நிரம்பி வெளியாகியிருக்கும் இப்படைப்பு குதூகலமான சுகப்பிரசவம். 

1 கருத்துகள்:

Venkat Rajendran சொன்னது…

Innum intha padam pakkala unga vimarsanam nallaruku.
Padam pakkanumnu thonuthu .keep writing.

கருத்துரையிடுக

 
-