ரஜினிக்கு அர்ப்பணிக்கிறேன். தேசிய விருது பெற்ற தனுஷ் பேட்டி.

தேசிய விருது பெற்றது குறித்து நடிகர் தனுஷ் பெருமிதத்துடன் கூறியதாவது: ‘ஆடுகளம்‘ படத்தை, தேசிய விருதுக்கு அனுப்பினது தெரிந்து மகிழ்ச்சி  அடைந்தேன். விருது கிடைத்தது அறிந்து  சந்தோஷத்துக்கு அளவே இல்லை. தேசிய விருது ஜூரிகளுக்கு நன்றி. ஏனென்றால் வட இந்தியாவில் தனுஷ் என்பவனை யாருக்குமே தெரியாது. அதற்கு பிறகு அம்மா, அப்பாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். எனக்கு சேர்கிற எல்லாத்துக்கும் அவங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.

எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த அண்ணன் செல்வராகவனுக்கும் இந்த விருதில் பங்கு இருக்கிறது. முதல் நாளில் இருந்தே விருது கிடைக்கும் என்று சொல்லி வந்த என் மனைவி ஐஸ்வர்யாவுக்கும் நன்றி. படத்தை பெரிய அளவுல மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சாருக்கு கட்டாயம் நன்றி சொல்லணும். இந்த விருதை ரஜினி சாருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்.

சிறந்த படம்    :    ஆதாமின்டே மகன் அபு (மலையாளம்)
சிறந்த நடிகர்    :    தனுஷ் (ஆடுகளம்), சலீம் குமார் (ஆதாமின்டே மகன் அபு)
சிறந்த இயக்குனர்    :    வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த திரைக்கதை    :    வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த நடன அமைப்பு    :    தினேஷ் (ஒத்த சொல்லால... ஆடுகளம்).
சிறந்த எடிட்டிங்    :    கிஷோர் (ஆடுகளம்)
சிறந்த பொழுதுபோக்கு படம்    :    தபங் (இந்தி)
சமூக பிரச்னை பற்றிய படம்    :    சாம்பியன்ஸ்(மராட்டி).
ஒளிப்பதிவு    :    மது அம்பாட் (ஆதாமின்டே மகன் அபு).
சிறந்த நடிகை    :    சரண்யா பொன்வண்ணன் (தென்மேற்கு பருவக்காற்று), மித்தாலி (பபு பஞ்ச் பாச்சா, மராட்டி).
சிறந்த குணசித்திர நடிகர்    :    தம்பி ராமய்யா (மைனா).
சிறந்த பாடலாசிரியர்    :    வைரமுத்து (கள்ளிக்காட்டில் பொறந்த தாயே, தென்மேற்கு பருவக்காற்று).
துணை நடிகை    :    சுகுமாரி (நம்ம கிராமம்).
தயாரிப்பு வடிவமைப்பு    :    சாபுசிரில் (எந்திரன்)
ஸ்பெஷல் எபெக்ட்ஸ்    :    ஸ்ரீனிவாஸ் மோகன் (எந்திரன்).
சிறந்த குழந்தைகள் படம்    :    ஹெச்சேகாலு (கன்னடம்).
இசைஅமைப்பாளர்    :    விஷால் பரத்வாஜ் (இஷ்க்யா), ஐசக் தாமஸ் (ஆதாமின்டே மகன் அபு).
ஜூரி  விருது         :    வ.ஐ.ச. ஜெயபாலன் (ஆடுகளம்).

கலாநிதி மாறனுக்கு விவேக் பாராட்டு

நடிகர் விவேக் கூறியதாவது: சன் பிக்சர்ஸின் ‘எந்திரன்‘, ‘ஆடுகளம்‘ படங்களுக்கு இத்தனை விருதுகள் கிடைத்திருப்பது பெருமையான விஷயம். ‘ஆடுகளம்‘ 6 விருது பெற்றிருப்பது பெருமையான விஷயம். இதில் நடித்த தனுஷ், அப்படியே மதுரை இளைஞனாக மாறியிருந்தார். மதுரை மண்ணின் வாழ்க்கையை எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாமல் வெற்றிமாறன் இயக்கினார். அதற்கான பரிசுதான் இந்த தேசிய விருது. ஆடுகளம் ஆர்ட் பிலிம் போல தோன்றும் கமர்ஷியல் படம். இந்த கதையை படமாக்குவது பெரிய ரிஸ்க். நிறைய துணிச்சல் வேண்டும்.

ஆடுகளம் அப்படி என்றால் ‘எந்திரன்’ அப்படியே தலைகீழ். அந்த பிரமாண்டம் இந்தியாவே இதுவரை பார்க்காதது. இத்தனை கோடிகளை கொட்டி படமெடுக்க மகா துணிச்சல் வேண்டும். இப்படி முற்றிலும் வெவ்வேறான கதைக்களத்தை சேர்ந்த இரண்டு படங்களையும் கொடுத்து தமிழுக்கு 8 தேசிய விருதுகள் கிடைக்க காரணமான கலாநிதி மாறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எந்திரனுக்காக ரொம்பவும் உழைத்த ரஜினிக்கும்  ஒரு விருது கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

என் அம்மா கனவு நனவாகி இருக்கிறது

வெற்றிமாறன் கூறியது: இந்த விருதை எதிர்பார்க்கவில்லை. என் அம்மா மேகலா எப்போதும் நான் டெல்லியில் விருது வாங்க வேண்டும் என்று சொல்பவர். அவர் கனவு நனவாகியிருக்கிறது. ஷூட்டிங் முழுக்க மதுரையில் நடந்தது. மனைவிக்கு குழந்தை பிறந்தபோதுகூட சென்று பார்க்க முடியவில்லை. அந்த வேதனைகளை தாங்கிகிட்ட மனைவிக்கு நன்றி. இது வழக்கமான படம் இல்லை. ஆனாலும் என் மேல நம்பிக்கை வச்சு, முழு ஆதரவு கொடுத்த சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். படத்தை மாஸ் கிட்ட கொண்டு சேர்த்தது அவர்தான்.

ஒளியேற்றியது மைனா

தம்பி ராமய்யா கூறியது: ‘சினிமாவில் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த எனக்கு ‘மைனா‘ ஒளியேற்றி வைத்தது. இயக்குனர் பிரபு சாலமனுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன். மேலும் நன்றாக நடிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை இந்த விருது தந்திருக்கிறது. வயது முதிர்ந்த எனது தாய்க்கும், ஒரு வெற்றி பெற மாட்டாரா என ஏங்கிய என் மனைவிக்கும் இந்த விருது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அவர்கள் சந்தோஷம்தான் எனது சந்தோஷமும்’

எதிர்பாராத விருது இது

சரண்யா கூறுகிறார்: ‘தென்மேற்கு பருவக்காற்று‘ படத்தை பார்த்துவிட்டு எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்று முதலில் சொன்னது மீடியாதான். அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது எதிர்பார்க்காத விருது. என்னை நம்பி இப்படியொரு கேரக்டரை கொடுத்த இயக்குனர் சீனு ராமசாமிக்கு நன்றி.

மக்களின் வாழ்க்கையை அப்படியே எடுத்ததற்கு கிடைத்த வெற்றி

இயக்குனர் சீனு ராமசாமி கூறியது: ‘தென்மேற்கு பருவக்காற்று‘ ஒரு நிலத்தின் கதை. சரியான நில பின்னணியோடு அந்த மக்களின் வாழ்க்கையை எந்தவித சமரசமும் இல்லாமல் நேர்மையாக பதிவு செய்ததற்காக கிடைத்த பரிசாக இதை கருதுகிறேன். என்னை சிறு இயக்குனர் என்று நினைக்காமல் தாய் கேரக்டரை உள்வாங்கி நடித்த சரண்யா, படத்தை முதலில் பார்த்து கண்ணீர்விட்டு பாடல் எழுதிய வைரமுத்து, துணிச்சலோடு தயாரித்த சிபு ஜசக் ஆகியோர்தான் இந்த விருதுக்கு காரணம்.

6-வது முறையாக விருது பெறும் வைரமுத்து

தேசிய விருதை 6-முறையாக, கவிஞர் வைரமுத்து வாங்குகிறார். முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களுக்காக தேசிய விருது பெற்றிருந்தார். அவர் கூறியது: பொதுவாக நான் பாட்டு எழுதிய பிறகுதான் படம் எடுப்பார்கள். ஆனால், ‘தென்மேற்கு பருவக்காற்று‘ படத்தில் தற்போது தேசிய விருது கிடைத்திருக்கும் ‘கள்ளிக்காட்டில் பொறந்த தாயே‘ பாடல் படம் எடுத்த பிறகு எழுதிய பாடல். இதுவரை நடுத்தர மற்றும் மேட்டுக்குடி தாய்களை பற்றிய பாடல்களே திரைப்படத்தில் வந்திருக்கிறது. முதன் முறையாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த, புழுதி மண்ணை சேர்ந்த ஒரு தாயின் பாடலாக இது எழுதப்பட்டது. தான் படிக்காமல் உழைத்து தன் பிள்ளைகளை படிக்க வைத்த, படிக்க வைத்துக் கொண்டிருக்கிற தாய்மார்களுக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்கிறேன்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பெயரில்லா சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

கருத்துரையிடுக

 
-