சிறுத்தை >> விமர்சனம்


பருத்தி கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம். இரட்டை ‌‌வேடத்தில் என்றாலும் ஒற்றை கார்த்திக்குத்தான் தமன்னா ஜோடி என்பது ஆறுதல். (இல்லையென்றால் அந்த கார்த்திக்கும் அவரது ஜோடிக்கும் நாலு டூயட்... இந்த கார்த்திக்கும் இவரது ஜோடிக்கும் நாலு டூயட் என்று மொத்த படத்தையம் முடித்திருப்பார்களே... அந்த வகையில் தப்பித்தோம் என்பதைத்தான் ஆறுதல் என்று சொல்கிறோம்)!

திருட்டையே தொழிலாக கொண்டவர் ஒரு கார்த்தி. அவர் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் கொண்டு வரும் ‌‌பெட்டியை நிறைய நகையும், பணமும் இருக்குமென்ற எண்ணத்தில் களவாடுகிறார். ஆனால் அதை திறந்தால் உள்ளே ஒரு அழகிய குழந்தை. திருட்டு ராஜாவான கார்த்தியை அந்த குழந்தை அப்பா என அழைக்க., கார்த்திக்கு தூக்கி வாரிப்போடுகிறது. அப்புறம்? அப்புறமென்ன... அந்த குழந்தையை திருட்டு கார்த்தியே வைத்து வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம். அதை வளர்த்தபடியே அதன் பெற்றோரை தேடி அலைகிறார் கார்த்தி. குழந்தையின் பெற்றோர் கிடைப்பதற்கு முன், அந்த தாதா குமபல் குழந்தையையும், அதை வளர்க்கும் கார்த்தியையும் தீர்த்துக் கட்ட துடியாய் துடிப்பதற்கு காரணம் என்ன? என்பதற்கு விடை சொல்ல வருகிறார் இன்னொரு கார்த்தி!. குழந்தையின் நிஜஅப்பாவான அவர், ஒரு காவல் அதிகாரியும் கூட! ஆந்திராவில் போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் அவரது நேர்மை பிடிக்காத ஆந்திர தாதாக்கள் சிலர்தான் குழந்தையையும், அதை வளர்க்கும் திருட்டு கார்த்தியையும் (போலீஸ் கார்த்தி என தவறுதலாக கருதி) போட்டுத் தள்ள துரத்துகின்றனர். தாதாக்களின் விருப்பம் நிறைவேறியதா? போலீஸ் அதிகாரியாக உருமாறிய கார்த்தி தாதாக்களை தவிடுபொடியாக்கினாரா? குழந்‌தையின் நிஜ அப்பாவான போலீஸ் கார்த்தி என்ன ஆனார்? தமன்னா - திருட்டு கார்த்தி இடையே காதல் ஏற்பட்டது என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு தெலுங்கு படங்களின் பாணியில் திகட்ட திகட்ட விடையளிக்கிறது மீதிக்கதை!

சகல திருட்டுக்ளிலும் கைதேர்ந்தவராக வரும் திருட்டு ராஜா கார்த்தியும் சரி, பிளாஷ் பேக்கில் போலீஸ் அதிகாரியாக மிடுக்கு காட்டும் கார்த்தியும் சரி... நடிப்பில் பட்டையை கிளப்பியிருக்கின்றனர். அதிலும் திருட்டு ‌கார்த்தி, போலீஸ் கார்த்தியை பல இடங்களில் ஓவர்டேக் செய்து தியேட்டரை அதிர வைக்கிறார் என்றால் மிகையல்ல. சந்தானத்துடன் பண்ணும் காமெடியில் பர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகிறார் அவர். வாழ்க்கையில் எத்தனையோ இடத்துல திருடியிருக்கேன்... இப்படி மெடிக்கல் ஷாப்பில் திருட ‌வச்சிட்டியேடா... என கார்த்தியிடம் சந்தானம் பண்ணும் அலப்பறையும், ஆளாளுக்கு டேய்ய்ய்ய்னு கத்துறீங்களே... அது என்ன ரவுடிகளோட ரிங் டோனா? என்று சந்தானம் சதாய்க்கிற காட்சியிலும் செம அப்ளாப்ஸ்! தியேட்டரே சிரிப்பில் குளோஸ்!!

தமன்னா, கார்த்திக்கு ‌பொருத்தமான ஜோடி. திருடனை நல்லவன் என ஏமாந்து இவர் காதல் பண்ணும் காட்சிகள் செம கலகலப்பு!

ஆந்திர கிராமம், மூன்று தாதா... அடிமை கிராமம் என போலீஸ் கார்த்திக்காக விரியும் பிளாஷ் பேக்கும், போலீஸ் அதிகாரியை தீர்த்துக் கட்டும் ஆந்திர ரவுடிகள், திருடன் கார்த்தியிடம் மண்ணை கவ்வுவதும் தெலுங்கு சினிமாவுக்கு வேண்டுமானால் ஓ.கே.! தமிழுக்கு?!

வித்யாசாகரின் வித்தியாச இசை, க.வேல்ராஜின் பிரமாண்ட பளிச் ஒளிப்பதிவு என ஆயிரம் வசதிகள் இருந்தும் சிவாவின் இயக்கத்தில் ஏதோ ஒன்று இல்லாததால் தை முதல்நாளில் வெளிவந்திருக்கும் சிறுத்தை கவரவில்லை கருத்தை!
Read more »

கார்த்தியின் இன்னொரு வெற்றிப்படம்!

தமிழ் சினிமாவின் வெற்றிகள் எல்லாம் இனிவரும் காலத்தில் சிவகுமார் அன்ட் கோவுக்கு போகப்போகிறது போல் தெரிகின்றது. நடிப்பில் ஒரு பக்கம் சூர்யாவும், மறுபக்கம் கார்த்தியும் பின்னிப் பெடலெடுக்கிறார்கள். வெற்றிகளை மாறி மாறி இவர்களே ருசிக்கிறார்கள்.
 
ஸ்ரூடியோ கிறீன் எஸ்.ஜி.ஞானவேல்ராஜாவின் தயாரிப்பில் கார்த்தி நடித்து பொங்கல் வெளியீடாக வந்துள்ள படம் சிறுத்தை. விக்ரமார்குடு தெலுங்கு படத்தின் ரீமேக் தான் இந்தப்படம். தெலுங்கு மூலக்கதைக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சிவா. படத்தில் தமன்னா, சந்தானம், சந்தானபாரதி, மனோபாலா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

சரி படத்தோட கதை என்ன?
சென்னையில்; காமெடி பீஸ_களாக கார்த்தியும், சந்தானமும் கொள்ளையடித்துத் திரிகிறார்கள். ஒருமுறை கல்யாண வீட்டில் திருடப் போகும் போது தமன்னாவைச் சந்திக்கிறார் கார்த்தி. மனதை பறிகொடுக்கிறார் (இடுப்பில்). ஏற்கனவே கார்த்தியின் கை வைத்தியத்தால் தமன்னா காப்பற்றப்பட்டிருக்கிறார். அதனால் தமன்னாவும் கார்த்தி மீது காதல் கொள்கிறார். தமன்னாவுக்காக கூட வந்த திருட்டுத் தோழன் சந்தானத்தை பிடித்துக் கொடுத்து நல்ல பேர் வாங்குகிறார் கார்த்தி.

ஒரு முறை 200 பவுண் நகையைத் தூக்குவதாக நினைத்து பெண் குழந்தை ஒன்றை கொண்டு வந்துவிடுகிறார்கள் இருவரும். திறந்துபார்த்த இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள. கண் விழித்த குழந்தை கார்த்தியை அப்பா என்கிறது. இதனால் பெரும் குழப்பங்கள். கார்த்தியை பார்க்க பெற்றோருடன் வரும் தமன்னா குழந்தையைக் கண்டதும் அதிர்ச்சியாகி அழுது புலம்புகிறார். குழந்தையை விட்டு தன்னுடன் வரும்படி அழைக்கிறார். குழந்தை தந்தையின் காலை கட்டி நிற்கிறது. இதேவேளை கார்த்தியையும், குழந்தையையும் கொல்ல ஒரு கூட்டம் திரிகிறது.

குழந்தை யாருடையது? கார்த்தி - குழந்தையைக் கொல்லத் திரியும் கூட்டம் யார்? கார்த்தி - தமன்னா சேர்ந்தார்களா என்பதை திரையில் காண்க. பல சுவாரசியமான திருப்பங்களும், நகைச்சுவையும் படத்தில் விரவிக் கிடப்பதனால் இன்று தவற விட்டவர்கள் நாளை பொங்கலை வெள்ளித்திரையுடன் கழியுங்கள்.

படத்தில் கார்த்தி இரட்டை வேடம். முதன்முறையாக அவர் ஏற்கும் இரட்டை வேடம் இது. கூடவே பொலிஸ் வேறு. பரட்டை தலையும், மூக்கின் மேலே ஒரு தழும்புமாக ஒரு கார்த்தியும்.. முறுக்கு மீசையுடன் விறைப்பாக, கம்பீரமாக இன்னொரு கார்த்தியும் நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். காமெடியில் புகுந்து விளையாடியிருக்கிறார் கார்த்தி. தமன்னாவின் இடுப்பை பார்க்கும் போது வெட்கப்படுவார் பாருங்க... சான்ஸே இல்ல... மிஸ்டர் சூர்யா! உங்களுக்கு வில்லன் இப்பிடி ஒரே வீட்டையா வளரணும்?

தமன்னா அழகுப்பதுமை. வெளேரெண்ட இடுப்பை அடிக்கடி காட்டி இம்சை பண்ணுகிறார். நவீன சீதை போலும்... கொடியிடை... நடிப்பு ஒட்டவில்லை. ஆனால் நளினங்கள் நன்றாகவே இருக்கின்றது. பாடல்களில் கவர்ச்சி விருந்தையே படைக்கிறார்கள்.

சந்தானத்தின் காமெடிகளில் வயிறு வலித்து விடுகிறது. கொள்ளையிட்ட பொருளை இருவரும் பங்கு பிரித்துக் கொள்ளும் காட்சிகளும், பொலிஸ் ஒருவர் சந்தானத்தின் பிரதான இடத்தைக் 'குறி' பார்ப்பதும், மாட்டிவிட்ட நண்பனுடன் படும் அவஸ்தையும் கலக்கல்.

தெலுங்கு வில்லன்கள் உருவத்திலும் சரி, செயற்பாடுகளிலும் சரி அருவருப்பை வர வைக்கிறார்கள். இந்த கொடூரங்களை குறைத்திருக்கலாம். இடையிடையே வந்து போகும் சந்தானபாரதி, மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலர் ரசிக்க வைக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தியே ஒரு சோகம், அண்மையில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சோபனா நடித்திருப்பது. தமிழ்சினிமாவிலுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய நகைச்சுவைப் பெண்களில் ஒருவர் இல்லாதது பேரிழப்புத் தான்.

முதல் பாதியின் பெரும்பகுதி நகைச்சுவையில் கழிந்தாலும் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால் படத்தின் நிறைவை நகைச்சுவையாகக் காட்டி படத்தின் தரத்தைக் குறைத்தவிட்டார் இயக்குனர். ஆரம்பத்தில் கொடூரமானவர்களாக தெரிந்த வில்லன்கள் கடைசியில் காமெடி பீஸ_களாக ஏமாறுவது சலிப்பை உண்டு பண்ணுகிறது. ஆனாலும் இயக்குனரின் வசனங்களில் தூள் பறக்கிறது. காக்கிச் சட்டையுடன் பேசும் வசனங்களாகட்டும், காமெடி வசனங்களாகட்டும் கைதட்டை அள்ளிக்கொள்கிறது.

வித்தியாசாகர் இசையில் பாடல்கள் ரசிக்கும் படி உள்ளது. பின்னணி இசையும் நன்றாகவே உள்ளது. கார்த்தியின் கை வித்தைக்கு கொடுக்கும் இசை இன்னும் பிரமாதம். கலை இயக்குனர் ராஜீவன். கார்த்தியின் இருப்பிடம் கலைப் பொக்கிஸமாக தெரிகிறது. (கொள்ளைப் பொருட்கள்). சண்டைப்பயிற்சி படு தூள். படத்தொகுப்பு வி.ரி.விஜயன். பாடல்கள், சண்டைக்காட்சிகளை அழகாக செதுக்கியிருக்கிறது.

Read more »
 
-